கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதன் காரணமாக மக்கள் வெளியே வர முடியாமல் தங்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளதால் பிற மாநிலங்களுக்கு வேலைக்குச் சென்ற தொழிலாளர்கள், தங்களின் சொந்த மாநிங்களுக்குச் திரும்ப முடியாமல் தவித்துவருகின்றனர். இந்நிலையில், டெல்லியில் கூலி வேலை செய்துவந்த உத்தரப் பிரதேசம், ஜார்கண்ட், பீகார் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் கரோனா பற்றி கவலைப்படாமல் தங்களின் சொந்து ஊர்களுக்கு நடந்தே செல்கின்றனர்.
கையில் குழந்தையுடனும், முதியவர்களை வைத்துக்கொண்டும் உணவு இல்லாமல் அவர்கள் படும் வேதனை கொடுமையானதாக இருக்கிறது. டெல்லி ஆனந்த்விஹார் பேருந்து நிலையத்தில் குவிந்த வெளிமாநிலத் தொழிலாளிகள், தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் தவித்து நிற்கும், புகைப்படங்கள் சில தினங்களாக சமூக வலைதலங்களில் வெளிவந்து அதிர்வலைகளை கிளப்பியுள்ளன. இந்நிலையில், புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அவரவர் சொந்த ஊர்களுக்குச் செல்ல மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரியங்கா காந்தி கோரிக்கை வைத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், "டெல்லி, காசியாபாத், ஆனந்த் விகார் உள்ளிட்ட பகுதிகளில் சோக நிகழ்வு நடந்தேறிவருகிறது. பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் கருணையின்றி நடத்தப்படுகிறார்கள். பல கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள தங்கள் வீடுகளுக்கு நடை பயணமாகவே செல்கின்றனர். சிலர் ரிக்ஷா, பேருந்து கூரைகளின் மீது பயணம் செய்துவருகின்றனர். இந்த அரசுக்கு என்ன தேவைப்படுகிறது என்பதை என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "லட்சக்கணக்கான சகோதர, சகோதரிகள் தங்கள் வீடுகளுக்குச் செல்ல முடியாமல் தவித்துவருகின்றனர். மக்கள் இப்படி நடத்தப்படுவதை கண்டு அவமானமாக உள்ளது. வெளிமாநில தொழிலாளர்களுக்கு உதவும் நோக்கில் மத்திய அரசிடம் எந்த திட்டமும் இல்லை" என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: இந்தியாவில் கரோனா பாதிப்பு ஆயிரத்தைத் தாண்டியது!