ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாட்டிலிருந்து ரூ. 305 கோடி முதலீடு பெறுவதற்கு, வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் அனுமதி அளித்ததில் ஊழல் நடந்திருப்பதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் பெயரையும், அவரின் மகன் கார்த்தி சிதம்பரம் பெயரையும் சிபிஐ சேர்த்தது. இதில் முன்பிணை கோரி டெல்லி நீதிமன்றத்தில் சிதம்பரம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை ஆகஸ்ட் 20ஆம் தேதி டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து செப்டம்பர் 5ஆம் தேதி அவர் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதே வழக்கில் அவரை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரி அமலாக்கத்துறை சார்பில் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அவரின் நீதிமன்றக் காவலை நீட்டித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து முன்பிணை கோரி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை விசாரித்தபோது, அவர் வேறு நாட்டுக்கு தப்பிக்க வாய்ப்புள்ளதாகவும், சாட்சியங்களை தன் பக்கம் இழுக்க முயற்சித்து வருவதாகவும் கூறி முன்பிணைக்கு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், ஊழலை நாடு சகித்துக்கொள்ள முடியாது என தன் வாதத்தை அவர் முன்வைத்தார்.
இதற்கு சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல், "சிதம்பரத்தின் பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வெளிநாடு செல்ல அவர் முயற்சிக்கவில்லை. உலகளவில் பிரபலமான அவர் எப்படி வெளிநாட்டுக்கு சென்று தப்பிக்க முடியும். சிறையில் உள்ள அவர் 4 கிலோ எடை குறைந்துள்ளார். மழைக்காலம் வருவதாலும், டெங்கு காய்ச்சல் அவரை தாக்க வாய்ப்புள்ளதாலும் அவரை சிறையில் வைத்திருப்பதை நியாயப்படுத்த முடியாது" என்றார்.
இதனைத் தொடர்ந்து 2 ஜி வழக்கு பற்றி பேசத் தொடங்கிய கபில் சிபலுக்கு, துஷார் மேத்தா ஆட்சேபனை தெரிவித்தார். இதற்கு சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர், சிலமுறை நீங்கள் மிரட்டுகிறீர்கள், சிலமுறை என்னை வாதம் செய்யவிடாமல் தடை செய்கிறீர்கள் என கூறினார். இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நிலவியதைத் தொடர்ந்து நீதிபதி பானுமதி தலையிட்டு சமாதானம் செய்து வைத்தார். இதனால் நீதிமன்றத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.