மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், நேற்று பாஜக, தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சியமைத்தது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவைக் குழு தலைவரும், சரத் பவாரின் மருமகனுமாகிய அஜித் பவார் தான் ஆட்சியமைக்க பாஜகவுக்கு உதவினார்.
இதற்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அது அஜித் பவாரின் தனிப்பட்ட முடிவு என்று அக்கட்சியின் தலைவர் சரத் பவார் கூறியிருந்த நிலையில், அஜித் பவாரின் முடிவு கட்சி தொண்டர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் பதவி, அஜித் பவாரிடமிருந்து பறிக்கப்பட்டது. இதனிடையே அஜித் பவார், "நான் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் தான் உள்ளேன். எனது தலைவர் சரத் பவார்தான். தேசியவாத காங்கிரஸ் - பாஜக கூட்டணி அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நிலையான ஆட்சி அளிக்கும். மாநில மக்களின் நலனுக்காக கூட்டணி தொடர்ந்து உழைக்கும்" என தெரிவித்திருந்தார்.
இதற்கு சரத் பவார், "பாஜகவிடம் கூட்டணி அமைப்பது குறித்த கேள்விக்கே இடமில்லை. சிவசேனா, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. அஜித் பவாரின் கருத்து தவறானது, மக்களிடையே குழப்பம் ஏற்படுத்த அவர் முயல்கிறார்" என பதிலளித்துள்ளார்.
இதையும் படிங்க: சரத் பவாருக்கு பெருகும் ஆதரவு!