நாட்டில் கோவிட் -19 பரவலையடுத்து, நாடு தழுவிய முழு அடைப்பு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து ரயில்வே உள்பட அனைத்து துறைகளும் முடக்கப்பட்டன.
நாடு முழுக்க இதர போக்குவரத்துகளும் முற்றிலும் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் பயணிகள் ரயில்கள் வருகிற 12ஆம் தேதி முதல் மீண்டும் பயணத்தை தொடங்கும் என ரயில்வே அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், “டெல்லி ரயில் நிலையத்திலிருந்து திப்ருகர், அகர்தலா, ஹவுரா, பாட்னா, பிலாஸ்பூர், ராஞ்சி, புவனேஸ்வர், செகந்திராபாத், பெங்களூரு, சென்னை, திருவனந்தபுரம், மட்கான், மும்பை (மத்தியப்பகுதி), அகமதாபாத் மற்றும் ஜம்மு ஆகிய பகுதிகளுக்கு ரயில்கள் இயக்கப்படும்” என கூறப்பட்டுள்ளது.
மேலும், “இந்த ரயில்களில் முன்பதிவு செய்வதற்கான முன்பதிவு மே-11 ஆம் தேதி மாலை 4 மணிக்கு தொடங்கி ஐஆர்சிடிசி இணையதளத்தில் மட்டுமே கிடைக்கும். ரயில் நிலையங்களில் டிக்கெட் முன்பதிவு கவுண்டர்கள் மூடப்பட்டிருக்கும்.
மேலும் பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகள் உட்பட எதுவும் வழங்கப்படாது. சரியான டிக்கெட் கொண்டுள்ள பயணிகள் மட்டுமே ரயில் நிலையங்களுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். முதல்கட்டமாக 30 ரயில்கள் மட்டும் இயக்கப்படும்” எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் 300 “ஷ்ராமிக் ஸ்பெஷல்” ரயில்கள் தினமும் இயக்கப்படும் என்றும் ரயில்வே நிர்வாகம் ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.