உத்தரப்பிரதேசம், பரேலி மாவட்டத்தில் உள்ள இனயத்பூர் கிராமத்தில் 10வயது சிறுமிக்கு, 12வயது சிறுவனுடன் குழந்தைத் திருமணம் நடைபெறுவதாகக் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அந்தக் குழந்தைகளின் பெற்றோர்கள் கூறியதாவது, " நாங்கள் கூலித்தொழில் செய்து வருகிறோம். குழந்தைத் திருமணம் நடத்தவில்லை. சிறுவனின் பாட்டி உடல் நிலை சரியில்லாமல் இருப்பதால், அவரது கடைசி விருப்பத்திற்கு ஏற்ப திருமண நிச்சயத்திற்கு உரிய சில சடங்குகளை மட்டும் செய்தோம். சிறுமிக்கு 18, பையனுக்கு 21 வயது ஆன பிறகு மீதமுள்ள சடங்குகளை முடிக்கவுள்ளோம்" என்றனர்.
இதைத் தொடர்ந்து, காவல் துறையினர் குழந்தைகளின் பெற்றோர்கள் நான்கு பேர் மீது குழந்தை திருமணத் தடைச் சட்டத்தின் 11 வது பிரிவு (குழந்தை திருமணத்தை ஊக்குவித்தல் அல்லது அனுமதித்தல்) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, மாவட்ட நன்னடத்தை அலுவலர் அந்த கிராமத்திற்கு சைல்ட் லைன் குழுவை அனுப்பி பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்குமாறு கேட்டுக் கொண்டார். மேலும் பெற்றோரை குழந்தைகள் நலக் குழு (சி.டபிள்யூ.சி) முன்பு ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:தெலங்கானாவில் குழந்தை திருமணத்தைத் தடுத்து நிறுத்திய காவல்துறை!