உத்தரப் பிரதேச மாநிலம் பிரத்தாப்புகர் மாவட்டத்திலுள்ள அலபூர் அருகே ரயில் தண்டவாளத்தில் 20 வயது மிக்க அடையாளம் தெரியாத இளம் பெண்ணின் உடல் அக்டோபர் 25ஆம் தேதி கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தியதில் கிஷுண்டாஸ்பூர் கிராமத்தைச் சேர்ந்த கமலேஷ் குமார் யாதவு என்பவரது மகள் என அடையாளம் காணப்பட்டது.
இதையடுத்து தனது மகளை கொலை செய்தவர்களை கண்டுபிடிக்கக்கோரி காவல்துறையினரிடம் கமலேஷ் புகார் அளித்தார். அதனைத்தொடர்ந்து நவாப்கஞ்ச் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர். இதற்கிடையில் அப்பெண்ணின் உடற்கூராய்வில் அவர் கர்பமாக இருந்ததாக தெரியவந்துள்ளது.
தொடர்ந்து, விசாரணையை தீவிரப்படுத்திய காவல் துறையினர், கமலேஷ் குமார் யாதவ் மற்றும் அவரது மனைவி அனிதா தேவி ஆகியோரை கடந்த 30ஆம் தேதி விசாரணைக்கு அழைத்தனர். அப்போது, பெற்றோர் இருவரும் கடந்த அக்டோபர் 24 ஆம் தேதி, தங்கள் மகளுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பெண்னை பரிசோதித்த மருத்துவர் அவருக்கு அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் எடுக்க பரிந்துரைந்துள்ளார்.
அந்த சோதனையில் மகள் ஆறு மாதம் கர்பமாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கர்ப்பத்தை கலைக்க பெற்றோர் முயன்றனர். ஆனால் கலைக்க முடியவில்லை. இந்த குழந்தை பிறந்தால் தனது குடும்பத்திற்கு அவமானம் என்று கருதிய பெற்றோர், அக்டோபர் 25 ஆம் தேதி அலபூர் ரயில் தண்டவாளம் அருகே அழைத்துச் சென்று அடித்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர்.
பின்னர் அது விபத்து அல்லது தற்கொலைபோல் தெரிவதற்காக உடலை தண்டவாளத்தில் வீசி சென்றுள்ளனர். அவர்கள் கொலைக்கு பயன்படுத்திய கோடரியை காவல் துறையனர் பறிமுதல் செய்தனர். குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து தம்பதியினர் சிறையில் அடைக்கப்பட்டனர்.