புல்வாமாவில் இந்தியப் படைகளை குறிவைத்து நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் 40 பாதுகாப்புப் படையினர் வீரமரணம் அடைந்தனர். இதற்கு பலிவாங்கும் வகையில் பாகிஸ்தானில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை அடையாளம் கண்டு இந்தியா பதில் தாக்குதல் நடத்தியது.
முதன்முறையாக இந்தியா, பாகிஸ்தான் நாட்டுக்குள் புகுந்து இந்தத் தாக்குதலை மேற்கொண்டது. தாக்குதலுக்கு பிறகு பேசிய இந்திய பாதுகாப்புப் படை உயர் அலுவலர், பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த உளவுத் துறையின் தகவலை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதில் பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்தார்.
ஆனால் இது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் இத்தாலி நாட்டைச் சேர்ந்த செய்தியாளர் ஃபிரான்செஸ்கா மரினோ சமூக வலைதளத்தில் இந்திய நடத்திய வான்வழித் தாக்குதல் குறித்து பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளார். அதில், 'பிப்ரவரி 26ஆம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு இந்தியா வான்வழித் தாக்குதலை நடத்தியது. ஆனால் 6 மணிக்குதான் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடந்த இடத்திற்கு வந்தது.
அப்போது தாக்குதலில் காயமடைந்த சுமார் 45 பேரை சிகிச்சைக்காக ஷின்கியாரியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றது. இப்போது வரை அங்கு பலர் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். அதில் 20-க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கிறார்கள். சிகிச்சை முடிந்தாலும் இன்னும் பலர் அந்நாட்டு பாதுகாப்புப்படை கட்டுப்பாட்டில்தான் இருக்கிறார்கள்.
எனக்கு கிடைத்த தகவலின்படி இந்தியா நடத்திய தாக்குதலில் 120-170 ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்தவர்கள் அங்கேயே கொல்லப்பட்டனர். மேலும் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் குடும்பங்கள் வழியாக செய்தி கசியலாம் என்பதால், அவர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டு வாய் அடைக்கப்பட்டுள்ளது' என தெரிவித்தார்.
ஹெச். ராஜா ட்விட்
இத்தாலி செய்தியாளர் தெரிவித்துள்ள கருத்துகளை அடிப்படையாக வைத்து பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், 'இங்குள்ள தற்குறிகளுக்கு அதெல்லாம் தெரியாது' என பதிவிட்டுள்ளார்.