மகாராஷ்டிரா மாநிலத்தின் கடலோர மாவட்டமான பல்கரில் கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி காரில் சென்று கொண்டிருந்த இரண்டு மதகுருக்கள் உள்பட மூன்று நபர்களை, குழந்தை கடத்தல்காரர்கள் என்று நினைத்து அப்பகுதி மக்கள் அடித்துக் கொலை செய்தனர். இந்தப் படுகொலை நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, சிபிசிஐடிக்கு இவ்வழக்கு மாற்றப்பட்டது.
இதனிடையே, வழக்கை விசாரித்து வரும் குற்றப்பரிவு - குற்றப் புலனாய்வுத்துறை அலுவலர்கள், இரண்டு சிறார்கள்மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். ஏற்கனவே, குற்றப்பரிவு - குற்றப் புலனாய்வுத்துறை இவ்வழக்கு தொடர்பாக இரண்டு குற்றப்பத்திரிக்கைகளை தாக்கல் செய்துள்ளது.
வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி இதுவரை 154 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 11 சிறார்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கும்பல் வன்முறையைத் தொடர்ந்து, பல்கர் மாவட்டத்தில் உள்ள காசா காவல் நிலையத்திலிருந்து 35 காவல் துறையினர் இடமாற்றம் செய்யப்பட்டனர். வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி வன்முறையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தார் உச்ச நீதிமன்றத்தில் முன்னதாக மனுதாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: முலாயம் சிங் உடல் நிலை சீராக உள்ளது - மருத்துவமனை அறிவிப்பு