ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச், ரஜோரி மாவட்டங்களில் நேற்றிரவு பாகிஸ்தான் பாதுகாப்புப்படை இரண்டு இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. பாலகோட் செக்டார், நவ்ஷெரா பகுதிகளில் ஊடுருவிய பாகிஸ்தான் படையினர் இந்திய நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் கிராம மக்களின் இருப்பிடங்களில் துப்பாக்கிச் கூடு நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் வீடுகள் பலவும் சேதமடைந்துள்ளன. கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் படைகள் சிறிய அளவிலான கை பீரங்கியையும் பயன்படுத்தியுள்ளன. இதன் சிதறிய குண்டுகளை அக்கிராமத்தினர் கண்டெடுத்து காவல் துறை அலுவலர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
நவ்ஷெராவில் இரவு 8 மணி முதல் 10 மணி வரையும் பாலகோட் செக்டாரில் இரவு 11.45 மணி முதல் அதிகாலை 2 மணி வரைவும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது என்று இந்திய பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது.
இது குறித்து பேசிய இந்திய பாதுகாப்புப்படை செய்தித் தொடர்பாளர் ஒருவர், "இந்தத் தாக்குதலில் இதுவரை எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை. இந்த ஆண்டில் மட்டும் பாகிஸ்தான் படை இரண்டாயிரத்து 50 முறை அத்துமீறி இந்திய எல்லையில் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர்" தெரிவித்துள்ளார்.