ஜம்மு - காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்திய - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பதற்றம் நிலவிவந்தது. இந்தியாவுடனான வர்த்தகம், போக்குவரத்து ஆகியவற்றை பாகிஸ்தான் நிறுத்திக்கொண்டது. இதனைத் தொடர்ந்து இந்திய எல்லை பகுதியில் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்திவந்தது. உலக நாடுகள் அனைத்தும் காஷ்மீர் பிரச்னையை அமைதி வழியில் பேசி தீர்த்துகொள்ளும்படி இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு கோரிக்கை விடுத்தது.
இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைப் பகுதியான உரியில் தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும், ஜம்மு - காஷ்மீர் பூன்ச் மாவட்டத்தின் இரண்டு இடங்களில் தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. 2003ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தை மதித்து நடக்கும்படி இந்தியா, பாகிஸ்தானை கேட்டுக்கொண்ட நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.