பண மோசடியை தடுக்கும் வகையில், 1989 ஆம் ஆண்டு பண மோசடி மற்றும் பயங்கரவாத நிதி தடுப்பு அமைப்பான எப்.ஏ.டி.எப் தொடங்கப்பட்டது. 2001ஆம் ஆண்டு பயங்கரவாத செயல்களுக்கு நிதியளிக்கும் அமைப்புகளுக்கு எதிராக இந்த அமைப்பு நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது.
அரசுகளுக்கு இடையேயான இந்த அமைப்பு, கிரே பட்டியல் என்ற ஒன்றை தயாரித்தது. நிதி மோசடி செய்வதற்கு ஏதுவான நாடுகளையும், பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவான நாடுகளையும் இந்தப் பட்டியலில் சேர்த்தது. இந்தப் பட்டியலில் உள்ள நாடுகளுக்கு சர்வதேச நிதி அமைப்புகள் கடன் அளிக்க தடைவிதித்தது.
பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அந்நாட்டை கிரே பட்டியலில் எப்.ஏ.டி.எப் சேர்த்தது. இந்தப் பட்டியலில் இருந்து வெளியேற 27 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என பாகிஸ்தானுக்கு இந்த அமைப்பு வலியுறுத்தியது.
ஆனால், அதில் 21 கோரிக்கைகளை மட்டுமே பாகிஸ்தான் நிறைவேற்றியுள்ளதாகவும் பயங்கரவாதிகளுக்கு தொடர்ந்து இருப்பிடம் அளித்துவரும் தாகவும் இந்தியா குற்றச்சாட்டு சுமத்தியுள்ளது.இந்நிலையில், கிரே பட்டியலில் பாகிஸ்தான் தொடரவே அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த முடிவு இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரவஸ்தவா கூறுகையில், "27 கோரிக்கைகளில் 21 கோரிக்கைகளை மட்டுமே பாகிஸ்தான் நிறைவேற்றியுள்ளது. ஐநா பாதுகாப்பு கவுன்சில் அறிவித்த பயங்கரவாதிகளுக்கு எதிராக அந்நாடு நடவடிக்கை எடுக்கவில்லை" என்றார்.