ஆன்லைன் வலைத்தள தொடர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்த வண்ணம் உள்ளன. திரைத்துறையில் இருக்கும் பிரபலமான நடிகர்கள் கூட தற்போது ஆன்லைன் மூலம் பார்க்கப்படும் வலைத்தளத் தொடர்களில் நடிக்கத் தொடங்கிவிட்டனர்.
இந்நிலையில் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா தயாரித்த வலைத்தளத் தொடரான ‘பாத்தாள் லோக்’ தொடரை எதிர்த்து, இது பலதரப்பட சமூகத்தினரைப் புண்படுத்துவதாகக் கூறி டெல்லி முகர்ஜி நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய இந்த 'பாத்தாள் லோக்' வலைத்தொடரின் தயாரிப்பாளர், நடிகை அனுஷ்கா சர்மா மீது மஞ்சீத் மாதா என்பவர் புகார் அளித்துள்ளதாக அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பல பிரபல நடிகர்கள் நடித்த இந்த வலைத்தொடரானது டெல்லி காவலரின் கதையை அடித்தளமாக கொண்டு அமைந்துள்ளது, அது அதிகாரத்தின் வலையில் சிக்கித் தவிக்கும் நேர்மையான அதிகாரிகளைப் பற்றி கூறும் திரில்லர் கதையாகும்.
இந்தத் தொடர் நேர்மறையான விமர்சனங்களைக் கொண்டிருந்தாலும் பல சர்ச்சைகளைத் தூண்டியுள்ளது. இதில் முன்னதாக பாஜக எம்எல்ஏ நந்த் கிஷோர் குர்ஜார் தனது புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்தியுள்ளனர் என்று புகார் அளித்திருந்தார்.
மேலும் மறுபுறம் சீக்கிய, குர்கா சமூகத்தினர் இத்தொடர் மீது புகார் அளித்திருந்தனர். அதாவது இரண்டு சீக்கியர்கள் மிகவும் மோசமாக காட்டப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். அதேசமயம் இந்தியா முழுவதும் 10.5 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் நேபாள மொழி பேசுகின்றனர். ஆனால் இதில் வரும் ஒரு காட்சி தங்களை மிகவும் வருத்தப்பட வைத்ததாக குர்கா சமூகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: 'உலகின் பணக்காரக் கட்சியான பாஜக, ஏழைகளை கருத்தில் கொள்ளாது'