டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசுகையில், டெல்லியில் ஜூன் மாத இறுதிக்குள் கரோனா சிகிச்சைக்காக 15,000 படுக்கைகள் தேவைப்படும் என்றும், 90 சதவிகித டெல்லி மக்கள் தங்களுக்கு முன்னுரிமை அளிக்க விரும்புவதால், டெல்லிவாசிகளுக்கு மட்டுமே அம்மாநில மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
மேலும், மத்திய அரசின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள பிற மருத்துவமனைகளில் அனைவரும் சிகிச்சைப் பெறலாம் எனவும் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த முடிவை விமர்சித்து முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப. சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதில் “டெல்லிவாசிகளுக்கு மட்டும் தான் டெல்லி மருத்துவமனைகளில் மருத்துவ சேவை வழங்கப்படும் என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். நான் டெல்லியில் வேலை செய்யவோ அல்லது வாழவோ செய்தால் நான் டெல்லிவாசி தானா? டெல்லிவாசிகள் யார் யார் என்பதை அரவிந்த் கெஜ்ரிவால் தெளிவுப்படுத்த வேண்டும்” என, ப. சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், ”ஒருவர், ஜன் ஆரோக்யா யோஜனா, ஆயுஷ்மான் பாரத் ஆகிய திட்டங்களில் பதிவு செய்திருந்தால் அவர் பட்டியலிடப்பட்ட எந்த ஒரு தனியார் அல்லது அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைப் பெறலாம் என நான் நினைத்திருந்தேன். இந்த அறிவிப்பை வெளியிடும்முன் கெஜ்ரிவால் சட்டப்பூர்வமான ஆலோசனைகளைப் பெற்றாரா?” எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டில் கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநகரங்களில் ஒன்றாக டெல்லியும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கரோனாவுக்கான சிறப்பு செயலியை வெளியிட்ட டெல்லி முதலமைச்சர்