1) கேள்வி- நாட்டின் பொருளாதாரம் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாக நீங்கள் கருத்து தெரிவித்திருந்தீர்கள். ஆனால் அரசு இதனை மறுத்து வருகிறதே?
பதில் - பொருளாதாரம் குறித்து நான் அவ்வாறு கூறவில்லை. அதனை அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியனே தெரிவித்துள்ளார். அண்மையில் அவர் இதுதொடர்பாக ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளார். மேலும் பொருளாதார நிலை குறித்த ஆதாரங்கள், புள்ளிவிவரங்களுடன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியும் அளித்துள்ளார்.
மத்திய அரசு அரவிந்த் சுப்ரமணியனின் கருத்து தவறானது என்று கருதினால், அதே தொலைக்காட்சிக்கு நேர்காணலுக்குச் சென்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆதாரங்களுடன் வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிடலாம் என்றுதான் நான் கூறியிருந்தேன். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யமாட்டார்கள். இந்த அரசு வீண் பேச்சிலேயே அதீத நம்பிக்கை கொண்டுள்ளது.
2) கேள்வி- பெரு நிறுவனங்களுக்கான வருமான வரி குறைக்கப்பட்ட அரசின் நடவடிக்கையை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
பதில் - பெரு நிறுவனங்களுக்கான வரிக் குறைப்பு நடவடிக்கையை சீர்திருத்த நடவடிக்கை என்று கூற முடியாது. அது தவறான முடிவு. மக்களின் வாங்கும் திறன் குறைந்து, தேவைகள் குறைந்து வரும் வேளையில் அரசு சுங்கவரி, ஜிஎஸ்டி போன்ற மறைமுக வரிகளையே குறைக்க வேண்டும். இந்த நடவடிக்கையும் தவறு என்றுதான் அரவிந்த் சுப்ரமணியன் கூறியிருக்கிறார்.
3)கேள்வி- நீங்கள் அரசின் தரவுகள் தொடர்பாக சந்தேகத்தை எழுப்பி இருந்தீர்கள். தற்போது இதுகுறித்து ஆய்வு செய்ய அரசு, முன்னாள் தேசிய தலைமைப் புள்ளியியல் ஆணையத் தலைவர் தலைமையில் குழு ஒன்றை நியமித்துள்ளது. இது குறித்து உங்களின் கருத்து என்ன?
பதில்- அரசு தனது தரவுகளின் நம்பகத்தன்மை குறைந்துள்ளதை காலதாமதத்துடன் ஏற்றுக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பின்மை தொடர்பான தரவுகள், ஊரகப் பகுதிகளில் நுகர்வு குறைந்துள்ளது தொடர்பான தரவுகள் ஆகியவற்றை அரசு மூடி மறைத்தது. எனவே அரசின் தரவுகளை வல்லுநர்கள் பலரும் சந்தேகத்தின் அடிப்படையிலே கேள்வியெழுப்பினர்.
அதனால் தற்போது ஆய்வு செய்யக் குழு அமைக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. அரசு தங்களது தரவுகளின் மீதான நம்பிக்கையை உறுதிசெய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆறு ஆண்டுகளில் இந்தியாவில் மத்திய அரசின் தரவுகள் உண்மைத்தன்மையை இழந்துள்ளன.
4)கேள்வி- வாராக்கடன்கள் குறைந்துவிட்டதாக அரசு கூறுகிறதே?
பதில்- அரசு அதிகளவிலான வாராக்கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. இதனால் ஒட்டுமொத்த வாராக்கடன்கள் குறைந்துள்ளது போன்று தோற்றமளிக்கிறது. இது கவர்ச்சிகர நடவடிக்கையே தவிர வேறொன்றும் அதில் இல்லை. அண்மையில் வெளியிடப்பட்ட ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் வாராக்கடன்கள் மீண்டும் உயரும் என்று தெரிவிக்கப்படுள்ளது.