உலகின் மிகச் சிறந்த ஆங்கில அகராதி நிறுவனங்களில் கருதப்படுவது ஆக்ஸ்போர்டு நிறுவனம். ஆங்கிலத்தில் புதிதாகப் புழக்கத்தில் வரும் வார்த்தைகளை அகராதிகளில் சேர்த்துக் கொள்வது வழக்கம். பிரெக்ஸிட், பேக் நியுஸ் போன்ற ட்ரென்டிங்கில் உள்ள புதிய ஆங்கில வார்த்தைகள் அகராதியில் சேர்க்கப்பட்டன. அதுபோல 'நாரி சக்தி' என்ற ஹிந்தி வார்த்தை கூட கடந்தாண்டு அகராதியில் சேர்த்தது ஆக்ஸ்போர்டு நிறுவனம்.
இதற்கிடையில் சில நாட்களுக்குமுன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்பட பதிவு வெளியிட்டிருந்தார். அதில் 'modilie' அதாவது 'மோடி பொய்' என்ற வார்த்தையைப் புதிதாக ஆக்ஸ்போர்டு நிறுவனம் சேர்த்ததாகக் கூறி புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். மோடி அதிகமாகப் பொய்களைப் பேசி வருவதாகத் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை முன் வைத்த ராகுல், மோடியைக் கிண்டல் செய்யும் விதமாக இப்பதிவைப் போட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்து ட்விட்டரில் பதிவு வெளியிட்டிருந்தது ஆக்ஸ்போர்டு நிறுவனம். அந்நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில், 'modilie' என்ற அர்த்தம் தரும் மோடி பொய்கள் என்ற வார்த்தையை நாங்கள் சேர்க்கவில்லை. அப்படி ஒரு வார்த்தை எங்கள் அகராதியில் இல்லை என மறுப்பு தெரிவித்துள்ளது.