மக்களவை, சட்டப்பேரவை ஆகியவற்றில் பட்டியலினத்தவர்களுக்கு (எஸ்சி, எஸ்டி பிரிவினர்) அரசியல் பிரநிதித்துவம் அளிக்கும் நோக்கில் அவர்களுக்கு இடஒதுக்கீடு அளித்து அவர்களுக்கென்று தனித்தொகுதி ஒதுக்க சட்டம் கொண்டுவரப்பட்டது. 1960ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இச்சட்டமானது தொடக்கத்தில் வெறும் 10 ஆண்டுகளுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என்று அப்போதைய மத்திய அரசால் கூறப்பட்டது.
எனினும், தொடர்ந்து பட்டியலினத்தவர்களை அங்கீகரிக்க வேண்டும் என்று எண்ணிய அடுத்தடுத்து வந்த மத்திய அரசுகள், ஒவ்வொரு 10 ஆண்டுகள் முடியும்போதும் மேற்குறிப்பிட்ட சட்டத்தை திருத்தி கூடுதலாக 10 ஆண்டு காலம் இட ஒதுக்கீடு வழங்க ஏற்பாடு செய்து வந்துள்ளன.
அதன்படி, 2020ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதியோடு இட ஒதுக்கீடு சட்டம் காலாவதியாகவுள்ள நிலையில், தற்போது மக்களவையில் அடுத்த பத்தாண்டுகளுக்கு இட ஒதுக்கீட்டை நீட்டிக்கும் வகையில் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த மசோதாவை 2030ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி வரை நீட்டிக்க கடந்த வாரம் புதன்கிழமை மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி சட்டத்திருத்த மசோதா குறித்து தனது கருத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “மக்களவையில் பட்டியலினத்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டை இன்னும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் சட்ட மசோதா ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதால் நான் பெரு மகிழ்ச்சியடைந்துள்ளேன்.
சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் அளிப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்று பேருவகையுடன் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நாளை மாநிலங்களவையில் தாக்கல்!