கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக வெளிநாட்டில் சிக்கிக் கொண்ட இந்தியர்கள் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம், வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் வந்தே பாரத் என்ற திட்டத்தின் மூலம் இந்தியாவுக்கு அழைத்துவரப்படுகின்றனர்.
கடந்த மே 7ஆம் தேதி முதல் மத்திய அரசு நடவடிக்கைகளை முன்னெடுத்துவரும் நிலையில், தற்போது நான்காம் கட்டமாக இந்தத் திட்டம் செயல்பட்டுவருகிறது.
இது தொடர்பாக முக்கிய தகவல்களை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்டார். அதில், “ ஜூலை 15ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 2ஆம் தேதி வரையிலான காலப்பகுதியில் மொத்தம் 1,197 விமானங்களை இயக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த கூடுதல் விமானங்கள் மூலமாக மொத்தம் 29 நாடுகளிலிருந்து சுமார் 80 ஆயிரம் இந்தியர்கள் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு ஏர் இந்தியா, இண்டிகோ, கோ ஏர் மற்றும் ஸ்பைஸ்ஜெட் ஆகிய விமான நிறுவனங்களின் சேவை பயன்படுத்தப்படும். ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி, 7 லட்சத்து 88 ஆயிரத்து 217 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
நேபாளம், பூட்டான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 976 பேர் நில எல்லை வழியாகத் நாடு திரும்பியுள்ளனர்” எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: 50 ஆயிரத்தை தாண்டிய தங்கத்தின் விலை!