அரபிக் கடலில் மையம் கொண்டுள்ள நிசார்கா புயல் மகாராஷ்டிரா- குஜராத் இடையே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில நிர்வாகம் தீவிரப்படுத்திவருகிறது.
புயல் கரையை கடக்கும்போது, சுமார் 120கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.
புயல் தீவிரமடைந்துள்ளதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தெற்கு குஜராத் கடற்கரை பகுதிகளில் வசிக்கும் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக குஜராத் மாநிலத்தின் வருவாய்த் துறை கூடுதல் செயலர் தெரிவித்துள்ளார்.
கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் அனைவரும் பாதுகாப்பாக வீடு திரும்பிவிட்டதாகவும், புயல் மீட்புப் பணிகளுக்காக 15 தேசிய பேரிடர் மீட்பு குழுவும், ஆறு மாநில பேரிடர் மீட்பு குழுவும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவ உதவிகளுக்காக 250 அவசர ஊர்திகளும், 170 மருத்துவ குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த புயல் மகாராஷ்டிரா தெற்கு குஜராத் பகுதிகளுக்கு இடையே கரையை கடக்கும் என்றும், அப்போது 100 முதல் 110 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. நிசார்கா புயலின் காரணமாக தெற்கு குஜராத் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருந்தபோதிலும் இந்த புயலினால் குஜராத் மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் அறிவித்துள்ளது.