இந்தியாவின் பல மாநிலங்களில் தீவிரமடைந்துவருகிற கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்றுநோய் பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மே 17ஆம் தேதிவரை முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதால் தொழிற்சாலைகள், ஆலைகள், வணிக நிறுவனங்கள், சிறு, குறு நிறுவனங்கள், சாலையோரக் கடைகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கின் எதிரொலியாக மாநிலம் விட்டு மாநிலம் சென்று வேலை செய்துவந்த ஏராளமானோர் வேலைவாய்ப்பை முற்றிலுமாக இழந்துள்ளனர். கூலித் தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள தங்களது சொந்த கிராமங்களை நோக்கி நடந்தவாறே பயணிக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்தநிலை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அவர்களுக்கு ஆதரவுக் குரல்களும் பெருகிவந்தன. இதனையடுத்து, குடிபெயர்ந்த தொழிலாளர்கள், ஆன்மிக யாத்ரீகர்கள், மாணவர்களைச் சொந்த மாநிலங்களுக்கு திருப்பியனுப்ப மத்திய உள் துறை அனுமதி அளித்தது. இதற்காக நாடு முழுவதும் ஷ்ராமிக் சிறப்பு ரயில் சேவையை இந்திய ரயில்வே தொடங்கியது.
இந்நிலையில், நேற்று டெல்லியிலிருந்து ஹவுரா, ஜம்மு, திருவனந்தபுரம், சென்னை, திப்ருகார், மும்பை, ராஞ்சி, அகமதாபாத் ஆகிய பகுதிகளுக்கு ஒன்பது ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.
அவற்றின் மூலமாக 9,000-க்கும் மேற்பட்டோர் டெல்லி நகரிலிருந்து வெளியேறியுள்ளனர். குறிப்பாக, அவற்றின் இருக்கை எண்ணிக்கையை மீறி முன்பதிவுசெய்யப்பட்டு இயக்கப்பட்டுள்ளதாகத் தரவுகளின் அடிப்படையில் அறிய முடிகிறது.
இந்திய ரயில்வே அமைச்சகத்தின் தரவுகளின் அடிப்படையில், அடுத்த ஏழு நாள்களுக்கு இந்தச் சிறப்பு ரயில்களில் பயணங்களை மேற்கொள்ள நேற்றுவரை இரண்டு லட்சத்து எட்டாயிரத்து 965 பயணிகள் முன்பதிவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று புறப்பட்ட ஒன்பது ரயில்களில், ஆயிரத்து 126 பேரை ஏற்றிச் செல்லக்கூடிய ஹவுரா ரயிலில் ஆயிரத்து 377 பயணிகளுக்கு முன்பதிவுசெய்யப்பட்டது. இது ரயிலின் கொள்ளளவைக் காட்டிலும் 22 விழுக்காடு அதிகமாகும்.
டெல்லி - திருவனந்தபுரம் சிறப்பு ரயிலில் அதன் கொள்ளளவைக் காட்டிலும் 33 விழுக்காடு முன்பதிவுசெய்யப்பட்டது. டெல்லி-சென்னை ரயிலில் 50 விழுக்காடு அதிகமாகும்.
இதேபோல், டெல்லி - ஜம்மு தாவி சிறப்பு ரயில் 9 விழுக்காடு கூடுதலாகவும், டெல்லி - ராஞ்சி ரயில் 15 விழுக்காடு கூடுதலாகவும், டெல்லி - மும்பை மத்திய ரயில் 17 விழுக்காடு கூடுதலாகவும், டெல்லி - அகமதாபாத் 2 விழுக்காடு கூடுதலாகவும் பயணிகளை ஏற்றிக்கொண்டு இயங்கியுள்ளன.
டெல்லி-திப்ருகார் ரயில் 33 விழுக்காடு கூடுதலாக பயணிகளை ஏற்றிக்கொண்டு இயங்கி உள்ளது. பிகார் தலைநகரான பாட்னாவுக்கு இயக்கப்பட்ட ஒரேயொரு ரயில் மட்டுமே 87 விழுக்காடு பயணிகளோடு இயங்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று மொத்தம் 13 ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்பது ரயில்கள் டெல்லியிலிருந்து புறப்பட்டன. நான்கு டெல்லிக்கு வந்துள்ளன. அதில் மொத்தமாக 19 ஆயிரத்து 374 பயணிகள் பயணித்துள்ளனர். டெல்லிக்கு வந்த நான்கு ரயில்களில் சுமார் 30 விழுக்காடு அதிகமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
டெல்லியிலிருந்து செவ்வாய்க்கிழமை மாலை புறப்பட்ட எட்டு ரயில்களில் பயணித்தவர்களின் எண்ணிக்கை எட்டாயிரத்து 121 என்று முன்னதாக கூறிய அமைச்சகம் நேற்று இந்த எண்ணிக்கையை 13 ஆயிரத்து 118 ஆக திருத்தியுள்ளது கவனிக்கத்தக்கது.
இதையும் படிங்க : 'மத்திய அரசின் பொருளாதாரத் திட்டம் மிகப்பெரிய பூஜ்ஜியம்!'