செப்டம்பர் 14ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் அக்டோபர் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 18 நாள்கள் நடைபெறும் இந்தக் கூட்டத்தொடரில் 45 மசோதாக்கள், நிதி தொடர்பான 2 விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமையான இன்றும் நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் விடுமுறையின்றி ஏழாவது நாளாக நடைபெற்றது. இதில் வேளாண் துறை தொடர்பாக வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருள்கள் திருத்த மசோதா ஆகிய மூன்று மசோதாக்களை மத்திய அரசு சார்பில் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு எதிரானவை, பெருநிறுவனங்களுக்கு ஆதரவானவை என்று குற்றம்சாட்டிய எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வேளாண் மசோதாக்களை தாக்கல் செய்தார்.
எதிர்க்கட்சிகள் கோரிக்கை நிராகரிப்பு:
இந்த மசோதா தேர்வுக்குழுவுக்கு அனுப்பப்பட்டு முழுமையான ஆய்வுக்கு பின்னரே அமல்படுத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கைகள் அனைத்தையும் மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஸ் நிராகரித்தார்.
தொடர் அமளியால் பாதியில் நிறுத்தப்பட்ட ராஜ்யசபா டிவி:
தங்களது கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதையடுத்து எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நாடு முழுவதும் நேரடி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த ராஜ்யசபா டிவி பாதியில் நிறுத்தப்பட்டது. பின்னர் சற்று நேரத்திற்கு பிறகு மீண்டும் ஒளிபரப்பு தொடங்கப்பட்டது.
தர்ணாவில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகள்:
வேளாண் மசோதாக்களுக்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து கடும் அமளியில் ஈடுபட்டனர். மூன்று மசோதாக்களையும் தேர்வுக்குழுவுக்கு அனுப்ப கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டு, மசோதாக்களின் நகலையும் எரித்தனர். இதனால் அவையில் பரபரப்பு நிலவியது. இதற்கு மத்தியில் குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு விவசாய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
வேளாண் துறை தொடர்பான இரு மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பின் மூலம் மாநிலங்களவையில் நிறைவேற்றபட்டதையடுத்து, அவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது. இருப்பினும் அவைக்குள் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக, இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் மாநிலங்களவையின் மையப்பகுதியில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
எதிர்க்கட்சிகள் போராட்டம், நம்பிக்கையில்லா தீர்மானம்:
மசோதாக்கள் குரல்வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டதையடுத்து அதிர்ச்சியடைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஸ் இருக்கையின் முன் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகள் அனைத்தையும் நிராகரித்து தன்னிச்சையாக முடிவெடுத்த மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஸ் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
டெரிக் ஓ பிரையன் குற்றச்சாட்டு:
இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி டெரிக் ஓ பிரையன், " நாடாளுமன்றத்தின் அனைத்து விதிகளையும் மாநிலங்களவை துணைத்தலைவர் மீறிவிட்டார். இது வரலாற்றில் மிகவும் மோசமாக நாள். நாட்டு மக்கள் பார்க்கக்கூடாது என்பதற்காக அவர்கள் ராஜ்யசபா டிவி தொடர்பையும் துண்டித்துள்ளனர்" எனத் தெரிவித்தார்.
கார்ப்பரேட் நாடு - திருச்சி சிவா குற்றச்சாட்டு:
மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள விவசாயிகள் மசோதாவை கடுமையாக விமர்சித்து பேசிய திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் இந்தியாவை கார்ப்பரேட் நாடு என்றுதான் அழைக்க முடியும் என்று தெரிவித்தார். கரோனா காரணமாக ஏற்பட்டுள்ள இந்த நிலையை பயன்படுத்தி, மத்திய அரசு பல்வேறு மசோதாக்களை அவசரகதியில் நிறைவேற்றுகிறது.
நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கும் தேர்வுக்குழுவிற்கும் அனுப்பாமலேயே மத்திய அரசு பெரும்பாலான மசோதாக்களை நிறைவேற்றுகிறது. அவசர கதியில் மத்திய அரசு ஏன் இந்த மசோதாக்களை நிறைவேற்றுகிறது என்ற கேள்வியும் எழுகிறது எனத் தெரிவித்தார்.