நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கிடப்பில் உள்ள மசோதாக்கள், திருத்தம் செய்யப்பட்ட மசோதாக்கள் ஆகியவற்றை மத்திய அரசு தாக்கல் செய்து நிறைவேற்றிவருகிறது.
அந்த வகையில், தேசிய புலனாய்வு முகமை சட்டத்திருத்த மசோதா, தகவல் அறியும் உரிமைச் சட்டத்திருத்த மசோதா, முத்தலாக் மசோதா உள்பட பல மசோதாக்களை தாக்கல் செய்து நிறைவேற்றியுள்ளனர்.
மேலும், இந்த மசோதாக்கள் மீதான விவாதத்தின்போது நாடாளுமன்றத்தின் தேர்வு கமிட்டி மற்றும் நிலைக்குழுவுக்கு அனுப்பவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் முறையிட்டன. ஆனால் நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்படாமலேயே மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில் அவசர அவசரமாக மசோதாக்கள் நிறைவேற்றப்படுவதாக காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி கட்சி, தெலுங்கு தேசம் உள்ளிட்ட 17 கட்சியினர் மாநிலங்களவை தலைவரான வெங்கயா நாயுடுவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அதில், ”முக்கிய மசோதாக்கள் குறித்து மாநிலங்களவையில் விவாதிக்க போதிய நேரம் வழங்கப்படவில்லை. நடப்பு கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட முதல் 14 மசோதாக்கள் பிற கட்சிகளின் ஆலோசனையின்றி நிறைவேற்றப்பட்டுள்ளன” என கூறப்பட்டுள்ளது.