தமிழ்நாடு முழுவதும் 48 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றை நாளொன்றுக்கு சராசரியாக ஒரு கோடியே 40 லட்சம் வாகனங்கள் கடக்கின்றன. இதில் கார்கள், சரக்கு வாகனங்கள், பேருந்து உள்ளிட்ட வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கட்டணம் வசூலிக்கும்போது ஏற்படும் வாகன நெரிசல், கைகலப்பு, வாக்குவாதம், வன்முறைச் சம்பவங்களைத் தவிர்க்கும் வகையில், வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் ரொக்கமாகப் பணம் வசூலிக்கும் முறை கைவிடப்படுகிறது.
அதற்குப் பதிலாக ஃபாஸ்டேக் (FASTag) எனப்படும் மின்னணு முறையில் சுங்கக்கட்டணம் செலுத்தும் திட்டம் நடைமுறைக்குவருகிறது. அதன்படி வாகனங்களின் முகப்பு விளக்குகளில் ஃபாஸ்டேக் (FASTag) என்னும் ஸ்டிக்கரை ஒட்டியிருக்கும் வாகனங்கள் மட்டுமே சுங்கச்சாவடியை கடக்க முடியும்.
இந்த ஸ்டிக்கர் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் விற்பனை செய்யப்படும். வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தின் பதிவுச் சான்றிதழின் நகலை கொடுத்து ஸ்டிக்கரைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும் இந்த ஸ்டிக்கரைப் பயன்படுத்தி தேவைக்கு ஏற்ப ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். சுங்கச்சாவடிகளை கடக்கும்போது இதற்காக வைக்கப்பட்டுள்ள ஸ்கேனர் ஸ்டிக்கரை ஸ்கேன் செய்து அதன்மூலம் சுங்கக்கட்டணத்தை பிடித்தம் செய்துகொள்ளப்படும். இந்த முறையினால், காலவிரயம் தவிர்க்கப்படுவதுடன் சுங்கச்சாவடிகளில் தேவையற்ற வாக்குவாதங்கள் தவிர்க்கப்படும் என்று தேசிய நெடுஞ்சாலைத் துறை தெரிவித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் வாகனங்களின் பதிவு எண்ணும் ஃபாஸ்டேக் (FASTag) மின்னணு ஸ்டிக்கரில் குறிப்பிடப்பட்டிருக்கும் பதிவு எண்ணும் ஒன்றாக இருந்தால் மட்டுமே சுங்கச்சாவடியை கடக்க முடியும். ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டாமல் கடக்கும் வாகனங்களுக்கு இருமடங்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.