பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஐபிஎல் சூதாட்டத்தில் பலர் ஈடுபடுவதாக காவல் துறையினருக்குத் தொடர்ந்து தகவல் கிடைத்தவண்ணம் உள்ளது.
இதையடுத்து, ஆய்வில் ஈடுபட்ட பெங்களூரு நகர காவலர்கள் நேற்று ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஒருவரைக் கைதுசெய்துள்ளனர். அவரிடமிருந்து 30.5 லட்ச ரூபாயையும், இரண்டு செல்போன்களையும் பறிமுதல்செய்துள்ளதாகக் கூறிய காவலர்கள், கைதுசெய்யப்பட்ட நபர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
முன்னதாக அக்டோபர் 4ஆம் தேதி மத்திய குற்றப் பிரிவு காவலர்கள் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக நான்கு பேரை கைதுசெய்து சுமார் ஐந்து லட்சம் ரூபாயை பறிமுதல்செய்துள்ளனர்.
அதேபோல, கடந்த 17ஆம் தேதி பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்ட காவலர்கள் ஐபிஎல் சூதாட்டத்திற்குப் பயன்படுத்திய 21 லட்ச ரூபாயை கைப்பற்றியுள்ளனர்.
2020ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் கரோனா வைரஸ் காரணமாக ரசிகர்கள் அனுமதியின்றி அபுதாபி, சார்ஜா, துபாய் ஆகிய பகுதிகளில் நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.