பாட்னா: இரண்டு வாரங்களுக்கு முன்பு இளம்பெண் ஒருவர் உயிரோடு எரிக்கப்பட்டது தொடர்பாக வைசாலி காவல்துறையினர் ஒருவரை கைது செய்தனர்.
இதுகுறித்து வைசாலியின் மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் கௌரவ் மங்ளா, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சந்தன் ராய் என்பவரை கைது செய்துள்ளோம். மேலும், குற்றம்சாட்டப்பட்டு தலைமறைவாக உள்ள வினய் ராய் மற்றும் அவரது மகன் சதிஷ் ராய் ஆகியோரை தனிப்படை அமைத்து தேடி வருகிறோம் என்றார்.
கேலி செய்ததை எதிர்த்து பேசிய காரணத்துக்காக குல்னாஸ் கதூன் என்ற இளம்பெண் மீது சதிஷ் ராய் மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தியிருக்கிறான். கடந்த அக்டோபர் 30ஆம் தேதி ரசூல்பூர் ஹபிப் கிராமத்தில் இந்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது. 75 சதவிகித தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குல்னாஸ், நேற்று (நவம்பர் 16) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
குல்னாஸ் தனது மரண வாக்குமூலத்தில், சதிஷ், வினய், சந்தன் ஆகிய மூவர் பெயரையும் குற்றவாளிகளாக குறிப்பிட்டுள்ளார். காணொலி வாயிலாக பதிவு செய்யப்பட்ட இந்த வாக்குமூலம், சமூக வலைதளங்களில் வைரலானது. அதில், சதிஷ் தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்ததாகவும், வினய், சந்தன் அதற்கு உதவியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 30ஆம் தேதி மாலை, வீட்டிற்கு வெளியே குப்பை கொட்டச் சென்ற குல்னாஸ் மீது சதீஷ் மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தியதாக குல்னாஸின் தாயார் கூறியிருக்கிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக முறையான நடவடிக்கை எடுக்காத சந்த்புரா காவல் நிலையர் பொறுப்பாளர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை கண்காணிப்பாளர் கௌரவ் மங்ளா தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'பிகாரில் பெண் எரித்து கொல்லப்பட்டதை நிதிஷ் குமார் மறைத்துவிட்டார்'- ராகுல் காந்தி