ஜம்மு காஷ்மீர் நக்ரோடா பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நவம்பர் 19ஆம் தேதி துப்பாக்கிச்சூடு நடந்தது.
மூன்று மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்தத் தாக்குதல் சம்பவத்தில் நான்கு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கிடையே தொடர் பதற்றம் நிலவிவருகிறது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் ரஜோரி மாவட்டத்தில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில், ராணுவ வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்துள்ளார்.
நவ்ஷேரா பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஹவில்தார் சங்ராம் பாட்டில் வீர மரணம் அடைந்ததாக பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் கர்ணல் தேவேந்திர ஆனந்த் தெரிவித்துள்ளார்.
தாக்குதலில் மரணம் அடைந்த சங்ராம் மகாராஷ்டிரா மாநிலம் கோலாபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதிலில் கோலாபூர் மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் உயிரிழப்பது இந்த மாதத்தில் இது இரண்டாவது முறையாகும்.
கடந்த 1999ஆம் ஆண்டு, இந்திய, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், பாகிஸ்தான் தொடர் அத்துமீறலில் ஈடுப்பட்டுவருகிறது.
இந்தாண்டு, ஜனவரி மாதத்திலிருந்து, 3,200 முறை பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், 30 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். 110க்கும் மேற்பட்டோருக்கு படுகாயம் ஏற்பட்டது.