ஜம்மு-காஷ்மீர் சிறப்புத் தகுதி நீக்க நடவடிக்கையைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 11-13 ஆகிய தேதிகளில் சீனா சென்றிருந்த வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கர், "ஜம்மு-காஷ்மீர் தொடர்பாக கடந்த 5ஆம் தேதி இந்தியா மேற்கொண்ட சட்டரீதியான நடவடிக்கை அப்பிராந்தியத்தில் நல்லாட்சி மற்றும் சமூக-பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும் என்பதற்காக எடுக்கப்பட்ட முடிவாகும். சீனாவுடன் இந்தியா பகிர்ந்துவரும் எல்லைக்கோட்டை எந்த விதத்திலும் இது பாதிக்காது" என உறுதியளித்திருந்தார்.
அப்படியிருந்தும், காஷ்மீர் பிரச்னையை சீனா ஐநாவுக்கு எடுத்துச் சென்ற சம்பவம் இந்தியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
ஹூஹான் சந்திப்பு
2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், இந்தியா-சீனா இடையேயான முதல் உச்சி மாநாடு நடைபெற்றது. உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த அந்த உச்சிமாநாட்டை பலரும் வரவேற்றனர்.
அப்போது பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்றுப் பேசிய சீன அதிபர் ஜி ஜின்பிங், "உலக வளர்ச்சிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இயந்திரங்களாக இந்தியா, சீனா நாடுகள் விளங்குகின்றன. உலக அமைதியையும், உறுதித்தன்மையையும் பேணுவதற்கு இந்தியா-சீனா உறவு மிகவும் அவசியமான ஒன்று.
மிகவும் அமைதியான சூழலில், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் பிரதமர் நரேந்திர மோடியும் ஆறு முறை சந்தித்துப் பேசினர். இதில், இருதரப்பு, சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு பிரச்னைகள் குறித்து இருவரும் விரிவாக ஆலோசித்தனர்.
இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து வெளியான கூட்டறிக்கையில், வளர்ச்சிக்கான ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், கருத்து வேறுபாடுகளை அமைதியான பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ளவும் இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்திருந்த முன்னாள் வெளியுறவுத் துறை செயலர் ஷாம் சரண், "இந்தியா எல்லை, இந்தியப் பெருங்கடலில் ஊடுருவும் வேலைகளைச் சீனா நிறுத்திக்கொள்ள வாய்ப்புகள் குறைவு, எனினும் முன்பைவிட இந்தியாவின் உணர்வுகளைச் சீனா மதிப்பதாகத் தெரிகிறது" எனக் கூறியிருந்தார்.
இதையும் வாசிங்க : விஷப் பரீட்சை : சீனாவை இந்தியா எப்படி எதிர்கொள்ளப் போகிறது ?
பொய்த்துப்போன நம்பிக்கை
40 அப்பாவி உயிர்கள் பறிபோவதற்குக் காரணமான புல்வாமா தாக்குதலை அடுத்தும் மசூத் அஸாரை (ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர்) பயங்கரவாதியென அறிவிக்க ஐநா பாதுகாப்பு சவுன்சிலில் சீனா மறுப்பு தெரிவித்த நிகழ்வு அந்த கொஞ்ச நம்பிக்கையையும் பொய்த்துப்போகச் செய்தது.
தாங்கள் தனிமைப்படுத்தப்பட்டோம் என்று உணர்ந்தபிறகே சீனா, வேண்டா வெறுப்பாக மசூத் அஸாரை பயங்கரவாதி என அறிவிக்க 2019 மே மாதம் ஐநாவில் ஒப்புக்கொண்டது.
காஷ்மீர் பிரச்னை
காஷ்மீர் பிரச்னையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஐநா, ஐநா மனித உரிமை கவுன்சிலில் பேசிய ஒரே வல்லரசு நாடு சீனா.
செப் 27ஆம் தேதி ஐநா பொதுசபைக் கூட்டத்தில் பேசிய சீன வெளியுறவுத் துறை அமைச்சர், "ஐநா சார்டர், பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்கள், இருதரப்பு ஒப்பந்தங்களின்படி காஷ்மீர் பிரச்னையை அமைதியாகவும் முறையாகவும் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும். தன்னிச்சையாக எந்த முடிவை யாரும் (இந்தியா) எடுக்கக் கூடாது" எனத் தெரிவித்தார்.
இதற்கு உடனே பதிலடி கொடுத்த இந்தியா, "பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத் திட்டத்தை சட்டவிரோதமாக செயல்படுத்துவதை சீனா நிறுத்திக்கொள்ள வேண்டும்" என அறிவுறுத்தியது.
இதையும் வாசிங்க: இந்திய-பாகிஸ்தான் பிரச்னையில் சீனா ஏன் தலையிடுகிறது?
மேலும், செப்டம்பரில் நடைபெறவிருந்த 22ஆம் கட்ட சிறப்புப் பிரிதிநிதிகளில் பேச்சுவார்த்தை கூட்டத்தை ரத்து செய்து இந்தியா தன் அதிருப்தியை பதியவைத்தது. அந்தக் கூட்டம் நடைபெற்றிருந்தால் (வெள்ளிக்கிழமை) மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள இரண்டாவது உச்சி மாநாட்டின்போது இருதலைவர்களுக்கும் உதவியிருக்கும்.
சீனாவின் 70ஆவது தேசிய தினத்தையொட்டி (அக்டோபர் 1ஆம் தேதி) சீனத் தூதரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியுறவுத் துறை (கிழக்கு) செயலர் தலைமை அழைப்பாளராகக் கலந்துகொண்டார். பொதுவாக இம்மாதிரியான நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள்தான் கலந்துகொள்வார்கள்.
இதுதவிர, வடக்கு பிராந்திய ராணுவத் துணைத் தளபதி ரம்பீர் சிங்கின் சீனப் பயணம் ரத்து செய்யப்பட்டது. ஜி-20 உச்சிமாநாட்டில் நடந்த JAI (ஜப்பான்-அமெரிக்க-இந்தியா) முத்தரப்புப் பேச்சுவார்த்தை, QUAD (அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா) பேச்சுவார்த்தை உள்ளிட்டவற்றைச் சீனா கூர்ந்து கவனித்துவருகிறது.
மாமல்லபுரம் சந்திப்பு
மாமல்லபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள இருநாட்டுத் தலைவர்கள் சந்திப்பின் மூலம், சீனா-இந்தியா நல்லுறவில் முன்னேற்றம் ஏற்படுமா? இல்லை வெற்று விளம்பரமா? என்ற கேள்விகள் எல்லோருடைய மனதிலும் சுற்றிவருகின்றன.
இருநாடுகளின் கண்ணோட்டத்தை புரிந்துகொள்வதற்கும் கருத்துவேறுபாடுகளைக் களைவதற்கும் இதுமாதிரியான உச்சி மாநாடுகள் அவசியமான ஒன்றாக அமைகிறது. அமெரிக்காவுடனான வர்த்தகப் போர், புதிய பட்டுப் பாதைக்கு எழுந்துள்ள எதிர்ப்புகள், ஹாங்காங்-திபெத் என சீனா எதிர்கொண்டுவரும் எண்ணற்ற பிரச்னைகளின் மத்தியில் இந்தச் சந்திப்பானது நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மாமல்லபுரம், சீனா, போதி தர்மர் - இந்தக் காரணிகளுக்குள் இருக்கும் பிணைப்பு என்ன?
சீனாவின் அசுர பலத்தை சரியாக புரிந்துகொண்ட இந்தியா, பாதுகாப்பைப் பலப்படுத்தும் நோக்கில் மும்முரமாக ஈடுபட்டுவருகிறது. சீனாவுடன் உரசல்களைத் தவிர்த்து அமைதியான பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைகளைக் கையாளுகிறது. டோக்லாம் சிக்கல் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
அதிபர் ஜி ஜின்பிங்கும் பிரதமர் மோடியும் பலமுறை சந்தித்துப் பேசியுள்ளனர். இருவரும் வலிமையான தலைவர்கள். ஒருவர் மீது ஒருவர் அதீத மரியாதை வைத்துள்ளனர். மாமல்லபுரம் சந்திப்பு இருநாடுகளுக்கும் இடையே நம்பிக்கையை அதிகரிக்க உதவும்.
இந்தியாவுடனான வர்த்தகப் பற்றாக்குறையை குறைத்துக்கொள்ளச் சீனா நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம். ஏன், மாமல்லபுரத்தில் வீற்றிருக்கும் 'திருமாலின் ஆசிர்வாதத்தால்' அற்புதம்கூட நடக்க வாய்ப்புள்ளது.
எப்படி இருந்தாலும் சரி, மோதலைத் தவிர்க்க இம்மாதிரியான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெறுவது அவசியம்.