மும்பையைச் சேர்ந்த ஓவியர் அப்துல் அன்சாரிக்கு சில நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு இதய அடைப்பு, இதயத்தில் ஓட்டை இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஏரோலி சிவிக் மருத்துவமனையில் பிறந்த குழந்தை மேல்சிகிச்சைக்காக மங்கள் பிரபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. குழந்தையின் உயிரைக் காப்பாற்ற உடனடியாக அறுவைசிகிச்சை மேற்கொள்ளவேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
குழந்தையின் உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து அன்சாரி குழந்தையை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். ஆனால், அவரிடம் அறுவை சிகிச்சைக்கான இரண்டு லட்சம் ரூபாய் இல்லை. தன்னுடைய குழந்தையின் உயிரைக் காக்க பணம் வேண்டி தன் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் நின்றுள்ளார். இந்தச் செய்தி சமூகவலைதளங்கள் மூலம் யுவ சேனா செயல்பாட்டாளர்களின் கவனத்துக்கு வந்தது.
இதனை யுவ சேனாவின் தலைவர் ஆதித்யா தாக்ரேவின் கவனத்துக்கு கொண்டு செல்ல, அவர் குழந்தையின் அறுவை சிகிச்சைக்காக 1லட்சம் ரூபாயை அளித்தார். மேலும், எதிர்காலத்தில் குழந்தையின் மருத்துவச் செலவையும் ஏற்பதாக தெரிவித்தார்.
குழந்தையின் உயிரைக்காப்பாற்ற வழி தெரியாமல் இருந்த பெற்றோர், ஆதித்யா தாக்ரேவின் உதவிக்கு தங்களது நன்றியைத் தெரிவித்தனர்.
முன்னதாக, பெருந்தொற்று காரணமாக தனது பிறந்தநாளைக் கொண்டாட விரும்பவில்லை என்றும், கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்ய தன் தொண்டர்களை ஆதித்யா தாக்ரே கேட்டுக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனாவின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் டெல்லி - அவசர ஆலோசனையில் அமித் ஷா