புதுச்சேரி மாநிலம் உருளையன்பேட்டை கோவிந்தசாலையைச் சேர்ந்தவர் தேவி. மூதாட்டியான இவர் வீட்டில் தனியாக இருக்கும்போது பர்தா அணிந்தபடி வந்த ஒரு பெண் இவரிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். அப்போது அந்த பெண் தேவியிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் செயினை பறித்துசென்றார்.
அப்போது தேவியும் அவரது தங்கை கிளாராவும் அப்பெண்ணை தடுக்க முயன்றபோது, அவர் கத்தியால் வெட்டியதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது.
இந்நிலையில், தேவி அலறும் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், காயமடைந்த தேவியை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரியகடை காவல் துறையினர், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அதே பகுதியில் தேவி வீட்டின் அருகே குடியிருக்கும் மங்கேளஸ்வரி என்ற பெண் சம்பவம் நடந்த தினத்தன்று பர்தா அணிந்து சென்றது சிசிடிவியில் பதிவாகியிருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து, காவல் துறையினரிடம் கையும் களவுமாக சிக்கிக்கொண்ட மங்களேஸ்வரியை கைது செய்து விசாரித்துவருகின்றனர். மேலும், கைது செய்யப்பட்ட மங்களேஸ்வரியிடம் இருந்து 3 பவுன் செயின் பறிமுதல் செய்யப்பட்டது.