ஒடிசா மாநிலம் கியோன்ஜாரில் பிராமணிபால் பகுதியில் வசிக்கும் ஜிதேந்திரா, இவர் பழங்குடியின இனத்தை சேர்ந்தவர் ஆவார். சிறு வயதிலேயே குடும்ப வறுமையின் காரணமாக 10ஆம் வகுப்புடன் பள்ளிப் படிப்பை முடித்துக்கொண்ட ஜிதேந்திரா, பிறந்து வளர்ந்த கிராமத்திற்கு எதேனும் செய்ய வேண்டும் என யோசித்துள்ளார். கிராமத்திற்கு அருகில் பெட்ரோல் பங்க் இல்லாத காரணத்தால், எப்போதும் சுமார் 20 கிமீ தொலைவில் துபுரி பகுதியில் அமைந்துள்ள பெட்ரோல் பங்கிற்கே செல்ல வேண்டிய கட்டாயம் இருந்தது. இதை யோசித்த ஜிதேந்திரா, ஏடிஎம் பெட்ரோல் மிஷினை உருவாக்கலாம் என முடிவு செய்துள்ளார். ஆனால், அதற்கான உதிரி பாகங்கள் வாங்குவதற்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், சுமார் ஏழு மாதத்திற்குள் அனைத்து உதிரி பாகங்களையும் வாங்கிவிட்டு வெற்றிகரமாக ஒரு வருடம் முன்னரே சாதனத்தை உருவாக்கி அசத்தியுள்ளார். ஆரம்பத்தில், பெட்ரோல் பெறுபவர் பணத்தை மிஷினில் செலுத்த வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால், தற்போது கரோனா காலகட்டம் என்பதால் ஆன்லைனில் பணம் செலுத்தி பெட்ரோல் பெற்று கொள்ளும் டிஜிட்டல் பேமெண்ட் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளார்.
இந்த இயந்திரத்திலிருந்து ஐம்பது மற்றும் ரூ.100 என்ற மதிப்பில் பெட்ரோல் கிடைக்கிறது. 24 மணி நேரமும் இயக்கும் இச்சேவைக்கு தனியாக ஆட்கள் நியமனம் செய்ய வேண்டிய அவசியமில்லை. அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஜிதேந்திரா அசால்டாக நிறைவேற்றியுள்ளார்.