ஒடிசா மாநிலம் பத்ராக் மாவட்டத்தில் இந்தக் கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. பாதிக்கப்பட்டவரின் மனைவி அளித்த புகாருக்குப் பின்னர் இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சம்பவத்தன்று ஒரு கும்பல் வீட்டுக்குள் நுழைந்து அவரின் கணவரைச் சரமாரியாகத் தாக்கியுள்ளது. வீட்டு முன்பு நின்ற காரைச் சேதப்படுத்திய அக்கும்பல், தட்டிக்கேட்ட அவர் கணவரின் தலையில் மொட்டையடித்துள்ளது. அதன்பின், அவர் தோளில் செருப்பைக் கட்டிவிட்டு ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளது. கூடவே அப்பெண்ணையும் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றுள்ளனர்.
ஒரு கட்டத்திற்கு மேல் நிர்கதியாய் நின்ற பாதிக்கப்பட்ட நபர் அக்கும்பலிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். ஆனால், அக்கும்பலைச் சேர்ந்த ஒருவர், அவர் மீது சிறுநீர் கழித்து அதைக் குடிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். இதுபோன்ற ஒரு கொடூரச் சம்பவத்தைக் கண்டும் ஊர் மக்கள் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
நடந்தவை அனைத்தையும் பாதிக்கப்பட்டவரின் மனைவி திகிதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக 17 பேர் மீது குற்றவியல் வழக்குப் பதியப்பட்டுள்ளதாக காவல் ஆய்வாளர் ரமேஷ் சந்திரா சிங் தெரிவித்துள்ளார். மேலும், முதற்கட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக இக்கொடூரச் செயலை அக்கும்பல் அரங்கேற்றியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதுதொடர்பாகப் பேசிய பத்ராக் மாவட்ட ஆட்சியர் கியான்ரஞ்சன் தாஸ், “இச்சம்பவம் குறித்து விரைந்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நாகரிகமான சமூகத்தில் இதுபோன்ற செயல்கள் நடைபெறுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு, கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள்” என்று கூறினார்.
இதையும் படிங்க: முன்னாள் முதலமைச்சர் பிறந்தநாளை புதுமையாக கொண்டாடிய தொண்டர்