பயிர்களின் மீது தாக்குதல் நடத்தும் வெட்டுக்கிளிகள் கூட்டதை தடுக்க பல மாநிலங்கள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதன் விளைவாக ராஜஸ்தான் மாநிலத்தில் வெட்டுக்கிளி தாக்குதலை எதிர்த்துப் போராடுவதற்கு முதல்முறையாக ட்ரோன்களும், விமானங்களும் பயன்படுத்தப்படும் என்று வேளாண்மைத் தொழில்நுட்ப மேலாண்மை நிறுவன திட்ட இயக்குநர் பி.ஆர். கார்வா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “வெட்டுக்கிளிகள் கூட்டம் தந்திரமாக செயல்படுகிறது. தாழ்வான பகுதிகளில் இயல்பை மீறி மிக உயரத்தில் பறக்கின்றன. இதனால் பூச்சிக்கொல்லி மருந்துகளை விமானம் மூலம் தெளிப்பதற்கு அரசாங்கத்திற்கு உதவுமாறு மத்திய வேளாண் துறை அமைச்சர் கைலாஷ் சவுத்ரி சிவில் ஏவியேஷன் இயக்குநரகத்திடம் (DGCA) கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள ட்ரோன்களைப் பயன்படுத்துவதற்கு ராஜஸ்தான் அரசு பரிசீலித்து வருகிறது. கடந்த மே 25ஆம் தேதி காலை, ஜெய்பூரில் வசிப்பவர்கள் வெட்டுக்கிளிகள் கூட்டத்தால் திடீரென தாக்கப்பட்டனர், இது நகரின் பல பகுதிகளை ஆக்கிரமித்துள்ளது. நகரத்தின் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெட்டுக்கிளிகள் கூட்டம் படையெடுத்தது இதுவே முதல் முறையாகும்.
கடந்த 1993 ஆம் ஆண்டின் குளிர்காலத்தில் வெட்டுக்கிளிகள் ஜெய்பூருக்குள் நுழைந்தன. பின்னர் 26 வருடங்கள் கழித்து தற்போது கோடையில் நகரத்தைத் தாக்கியுள்ளது. இந்நிலையில் வளர்ந்து நிற்கக்கூடிய அளவிற்கு எந்தவித பயிர்களும் இந்த சீசனில் இல்லை அதனால் பெரிய சேதம் ஏதும் ஏற்படவில்லை” என்றார்.
இதற்கிடையில், வெட்டுக்கிளிகள் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானின் எல்லைகளை அவற்றின் இனப்பெருக்க மையங்களாக மாற்றியிருப்பதால் இதனைக் கட்டுப்படுத்த பாகிஸ்தான் அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை வேளாண்மைத் துறை அலுவலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதற்குமுன்னர் வெட்டுக்கிளிகளின் இனப்பெருக்க மையங்கள் ஆப்பிரிக்க நாடுகளாக இருந்ததால் அவை இந்தியாவை அடைய நேரம் எடுத்துக்கொண்டன. ஆனால் இப்போது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகள் அவைகளின் இனப்பெருக்க மையமாக மாறியுள்ளதால் எளிதாக ராஜஸ்தானுக்குள் நுழைந்துவிடுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: வெயிலில் தவித்த வனவிலங்குகள்... ஏர் கூலர் அமைத்த பூங்கா நிர்வாகம்!