தேர்தல் விளம்பரங்கள்
தேர்தலில் வெற்றி பெற அரசியல் கட்சிகள் எந்த எல்லைக்கும் செல்லும் என வாக்காளர்கள் நினைக்க தொடங்கிவிட்டனர். திரும்பிய இடமெல்லாம் பரப்புரை, டிவி, பேப்பர், பேஸ்புக், யூடியூப் டிவிட்டர் என எங்குச் சென்றாலும் தேர்தல் பரப்புரை விளம்பரங்கள்தான். இதிலிருந்து தப்பலாம் என்று வீட்டை விட்டு வெளியேறினால் அங்கும் வேட்பாளர்கள், கட்சித் தொண்டர்கள் பரப்புரை.
இதில் மற்ற கட்சிகளை விட பாஜக ஒரு படி மேலேதான் செல்கிறது. பிற கட்சிகளை விட மிகப் பெரிய ஊடக பலம் பாஜகவுக்கு உள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. பேஸ்புக்கில் அதிகம் விளம்பரம் செய்யும் கட்சிகள் பட்டியலிலும் அக்கட்சி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
பிஎம் நரேந்திர மோடி
2014 தேர்தலில் பாஜக வெற்றி பெற சமூக வலைதளங்களே முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த தேர்தலில் சமூக வலைதளங்களில் மட்டும் கவனம் செலுத்தாமல் அதையும் தாண்டி பல்வேறு முயற்சிகளில் அக்கட்சி இறங்கியுள்ளது. அதில் ஒன்றுதான் பிஎம் நரேந்திர மோடி திரைப்படம். அந்தப் படத்துக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்கிறது பாஜக. அதையேதான் அத்திரைப்பட இயக்குநரும் சொல்கிறார். ஆனால் அதை தடை செய்ய வேண்டாம் என உச்ச நீதிமன்றத்தில் வாதாடுகிறது பாஜக. அதேபோல், மோடியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டுள்ள மோடி- ஜர்னி ஆஃப் எ காமன் மேன் எனும் வெப் சீரிஸ் வரும் புதன்கிழமை முதல் வெளியாகிறது.
நமோ டிவி
மற்றொரு புறம் நமோ டிவி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. டாடா ஸ்கையில் சந்தாதாரர்கள் தேர்வு செய்யாமலே நமோ டிவி ஒளிபரப்பப்படுவதாக நெட்டிசன்கள் பலரும் டிவிட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அண்மையில் ஹிந்தியில் அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான கேசரி திரைப்படத்தில் மறைமுகமாக பாஜக ஆதரவு கருத்துக்கள் இருந்ததாக சினிமா ரசிகர்கள் பலரும் குறைகூறி வந்தனர்.
சீரியல் விளம்பரம்
இப்படியாக பாஜக பல்வேறு தளங்களில் தனது பரப்புரையை முன்னிறுத்தி வருகிறது. ஆனால் இப்போது அது கையில் எடுத்திருக்கும் ஆயுதம் சாதாரணமானது அல்ல. டிவி சீரியல்கள்! தொலைக்காட்சி தொடர்கள் மூலமாக அக்கட்சி மறைமுக பரப்புரை மேற்கொள்வதாக பலரும் புகார் தெரிவித்து வருகின்றனர். ஜீ தொலைக்காட்சியின் ஒளிபரப்பப்படும் பிரபல ஹிந்தி சீரியல்களில் மோடியின் உஜ்வாலா திட்டத்தை பற்றியும், தூய்மை இந்தியா திட்டத்தை பற்றியும் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். இந்த திட்டத்தின் மூலம் இத்தனை கோடி மக்கள் பலனடைந்தனர் என்றும், இனியும் மக்கள் பொதுவெளியில் மலம் கழிக்கும் அவல நிலை இல்லை என்றும் கூறி வருகின்றனர். ஆனால் மிகவும் கவனமாக இது மறைமுகமாக செய்யப்படுகிறது. ஒரு முறை கூட மோடியின் பெயர் உச்சரிக்கப்படவில்லை.
பொதுவாகவே டிவி சீரியல்களை பெண்களே அதிக அளவில் பார்ப்பர். அதில் பிரசாரம் மேற்கொள்வதன் மூலம் கிட்டதட்ட பாதி அளவு பெண் வாக்காளர்களை குறிவைத்து பாஜக செயல்படுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். செய்தி சேனல்களில் தலைவர்கள் ஆவேச பேச்சுகளை கேட்டு போர் அடித்த மக்கள் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகலாம் என்று டிவி சீரியல் பக்கம் போனால் அங்கும் இது போன்று நடக்கிறது. தேர்தல் முடியும் வரை இந்த அரசியல் விளம்பரங்களை மக்கள் சகித்துத்தான் ஆக வேண்டும் வேறு வழியில்லை.