சென்னை குரோம்பேட்டையை அடுத்த நாகல்கேணி அம்பேத்கர் நகர் பகுதியில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த நிஜாமுதீன்(32), அவரது மனைவி ஷப்புல் பானு(19) ஆகியோர் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கி வந்தனர்.
இவர்களுக்குத் திருமணம் ஆகி, மூன்று ஆண்டுகள் ஆகிய நிலையில், அதே பகுதியில் கட்டட வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு நிஜாமுதீன், அடிக்கடி தகராறில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.
இந்நிலையில் இன்று (ஜூன் 11) இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் ஷப்புல் பானு, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதையடுத்து நண்பகல் வீட்டிற்கு வந்த நிஜாமுதீன் வீட்டின் கதவு உள்பக்கம் பூட்டி இருந்ததால், சந்தேகமடைந்து கதவை உடைத்துப் பார்த்துள்ளார். அப்போது ஷப்புல் பானு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பின்னர் தகவல் அறிந்து வந்த குரோம்பேட்டை காவல் துறையினர், சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நிஜாமுதீனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.