புதுச்சேரி கல்வித் துறை அமைச்சர் கமலக்கண்ணன் செய்தியாளர்களிடம் பேசியபோது, “ புதுச்சேரியில் நீட் அல்லாத கல்லூரி படிப்புகளுக்கு வரும் 20ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலமாகவும் நேரடியாகவும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் இயங்காத காரணத்தினால் நான்கு மாதங்களுக்கு 50 ஆயிரம் மாணவர்களுக்கு தலா நான்கு கிலோ அரிசி, மளிகைப் பொருள்களும், 250 ரூபாயிலிருந்து 330 ரூபாய் வரை அந்தந்த அரசுப் பள்ளி வளாகங்களில் பெற்றோரிடம் வழங்கப்படும். மேலும், அரசுப் பள்ளிகளில் மதிய உணவுக்குப் பதிலாக மாணவர்களின் பெற்றோர்களிடம் பணம் வழங்கப்பட்டுவருகிறது.
புச்சேரி மாநிலத்தில் உள்ள பல தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ள நிலையில், கட்டண வசூல் குறித்து பிறப்பித்துள்ள சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து ஓரிரு நாளில் முதலமைச்சருடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.
மாநிலத்தில் தமிழ்நாட்டைப் போலவே, உள்ளூர்த் தொலைக்காட்சிகள் மூலம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும்” என்றார்.