கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவினால், பல்வேறு மக்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகியிருக்கின்றனர். அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வந்தாலும், இவர்களின் பார்வையில் படாத ஏராளமான மக்கள் இருக்கவே செய்கிறார்கள்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், அனந்த்நாக் மாவட்டத்தில், ஜம்மு-ஶ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் குஜ்ஜர் பகர்வால் எனும் நாடோடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த ஒரு மாதகாலமாக குடில் அமைத்து தங்கியுள்ளனர்.
ஊரடங்கின்போது அவர்கள் எதிர்கொண்ட பிரச்னைகள் குறித்து கேட்டறியச் சென்ற நமது ஈடிவி பாரத் செய்தியாளரிடம், "இதுவரை தங்களுக்கு அரசோ, தொண்டு நிறுவன அமைப்போ எங்களுக்கு உதவவில்லை. கடந்த இரண்டு மாத ஊரடங்கினால் வேலை, வருமானம் இல்லாமல் இருக்கிறோம். உப்புக்கஞ்சியை காய்ச்சி, குடித்துக் கொண்டிருக்கிறோம். சில நாட்கள் உணவில்லாமலேயே இருந்திருக்கிறோம். இதைச்சுற்றியுள்ள பகுதிகளில், எங்காவது வேலைக்குச் செல்லலாம் என்றால், கரோனா அச்சத்தால் யாரும் வேலைக்குச் சேர்த்துக்கொள்வதில்லை. வருமானம் இல்லாததால் தற்போது நாங்கள் வளர்த்து வரும் ஆடுகளை விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். குழந்தைகளுக்குப் பால் வாங்குவதற்குக்கூட பணம் இல்லை" என்று தெரிவித்தனர்.
ஏழைகளாகிய இவர்கள் அரசிடமிருந்து உதவியை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்த நெடுஞ்சாலையில் செல்லும் யாராவது ஒருவர் நம்மைக் கண்டு உதவி செய்வார்கள் என்ற நம்பிக்கையோடு இருக்கின்றனர். ஆனால், ஏமாற்றமே தினமும் அவர்களுக்கு மிஞ்சுகிறது.