கேரளா மாநிலம், பாலக்காட்டில் வெடி மறைத்து வைக்கப்பட்டிருந்த அன்னாசி பழத்தை சாப்பிட்டு கர்ப்பிணி யானை உயிரிழந்தது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், கிராமவாசிகள் சிலர் வெடியை மறைத்து வைக்கப்பட்ட அன்னாசி பழத்தை வேண்டுமென்றே யானைக்கு வழங்கியதாகவும், அதை யானை கடித்தபோது வாய்ப்பகுதியில் காயம் ஏற்பட்டதாகவும் சிலர் சமூக வலைதளங்களில் தகவல்களை பரப்பிவருகின்றனர்.
ஆனால் இவ்வாறு பரப்பப்படும் தகவல்கள் முற்றிலும் பொய்யானது என்று கேரளாவின் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சுரேந்திர குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "கேரளாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த இந்தப் பொய் பரப்புரை தொடங்கப்பட்டுள்ளது.
அன்னாசி பழத்தில் வெடியை மறைத்து யானைக்கு வழங்க, நிச்சயம் யாருக்கும் தைரியமிருக்காது. இந்தக் கதை நம்பும் வகையில் இல்லை. யானையின் வாய்ப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது என்னவோ உண்மைதான். உள்ளூர் விவசாயிகள் காட்டுப்பன்றிகளை விரட்ட பழங்களில் வெடி பொருள்களை மறைத்து வைப்பார்கள்.
இது சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைதான். இப்படி மறைத்து வைக்கப்பட்டிருந்த பழத்தை அந்த யானை உட்கொண்டிருக்கலாம்" என்றார்.
முன்னதாக, யானை கொல்லப்பட்ட இந்த வழக்கை கேரள வனத்துறையும், காவல் துறையும் இணைந்து விசாரணை செய்துவருகின்றன. இந்த வழக்கு தொடர்பாக, இன்று(ஜூன்.5) ஒருவரை கேரள வனத்துறை கைது செய்தது. மேலும், இருவரை தேடிவருவதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
குற்றம்சாட்டப்பட்ட மற்ற இருவர் கைது செய்யப்பட்ட பிறகே, யானை எப்படி உயிரிழந்தது என்பது தெரியவரும் என்றும் சுரேந்திரகுமார் கூறினார்.
இதையும் படிங்க: யானை கொல்லப்பட்ட வழக்கு - அறிக்கை தாக்கல் செய்ய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு