இந்தாண்டில் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை வென்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அபிஜித் பானர்ஜி, தற்போது இந்தியாவில் வங்கிகள் பெரும் நெருக்கடியைச் சந்தித்துவருவதாகவும் இதைச் சரி செய்ய அதிரடியாக சில மாற்றங்களைச் செயல்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் வங்கிகளில் அரசின் பங்குகளை 50 விழுக்காட்டிற்குக் கீழ் குறைக்க வேண்டும் என்றும் அப்போதுதான் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்துக்கு (Central Vigilance Commission - CVC) அஞ்சாமல் வங்கிகளால் முடிவுகளை எடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்திய வங்கிகள் கடந்த ஐந்து ஆண்டுகளாகவே வாராக்கடன் பிரச்னையில் சிக்கித் தவித்துவருகிறது, இதனால் வங்கிகளின் நிகர மதிப்பு சரிந்துவருகிறது. மேலும், வங்கித் துறையில் பெரும் ஊழல் அதிகரித்துள்ளது. சமீபத்தில் பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கிகளில் கண்டுபிடிக்கப்பட்ட ஊழல்களே இதற்குச் சாட்சி.
முன்னதாக ஆகஸ்ட் மாதம், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் முன்னாள் ஆணையர் டி.எம். பாசின் தலைமையில் வங்கி மோசடிகளை விசாரிக்க அதற்கான ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டிருந்தது.
2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ரூ.8.65 லட்சம் கோடியாக இருந்த வாராக்கடன் இந்தாண்டு மார்ச் மாதம் ரூ.7.9 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளதால் பொதுத் துறை வங்கிகளின் லாபம் அதிகரித்துவருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.
இதையும் படிங்க: விசில்ப்ளோவர் குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு சரிந்த இன்ஃபோசிஸ் பங்குகள்!