கரோனா வைரஸ் பாதிப்புக் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்களின் அனைத்து நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டன. மே 3ஆம் தேதிக்குப் பிறகு, ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது.
இதையடுத்து பல்வேறு மாநிலங்களிலும் மதுபான கடைகள் திறக்கப்பட்டன. சில மாநிலங்களில் வரலாறு காணாத அளவிற்கு மதுபானங்கள் விற்றுத் தீர்ந்தன. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் மதுபான கடைகள் திறக்கப்பட்டும், மதுபானம் வாங்குவதற்கு கூட்டமில்லாத சம்பவம் பொதுமக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ள கலால் வரியை மறு ஆய்வு செய்யக்கோரி, சில மாவட்டங்களில் மனபான கடைகள் மூடப்பட்டிருந்தாலும், பெரும்பாலான மாவட்டங்களில் மது கடைகள் திறந்தே உள்ளன.
இதுகுறித்து மதுபான கடை விற்பனையாளர் ஒருவர் பேசுகையில், '' காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை மதுபான கடைகளைத் திறப்பதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. வீட்டிற்குச் சென்று மதுபானங்களை வழங்கும் முறையையும் அறிமுகப்படுத்தியுள்ளது. 43 நாள்களுக்குப் பிறகு அரசு மதுபான கடைகளைத் திறக்க அனுமதியளித்ததால், அதிகமாக விற்பனை இருக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு மக்கள் மதுபானம் வாங்க வரவில்லை.
சண்டிகரில் மே 4ஆம் தேதி மதுபான கடைகள் திறந்தபோது, மொகாலியில் உள்ள பலரும் சண்டிகரில் இயங்கிய கடைகளில் வாங்கிவிட்டனர். அதேபோல் கரோனாவால் பல்வேறு தரப்பினருக்கும் வேலை இல்லாமல் உள்ளது. சிலருக்கு வேலை பறிபோயுள்ளது. இதனால் மதுபானம் வாங்குவதற்குப் பணம் இல்லாமல் உள்ளனர்.
இடம்பெயர் தொழிலாளர்கள் பலரும் மாநிலத்திலிருந்து வெளியேறியுள்ளனர். அதனால் மதுபானம் வாங்க கூட்டமில்லாமல் உள்ளது'' என்றார்.
இதையும் படிங்க: நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சிக்காக நாடு மொத்தமும் விலை கொடுத்துள்ளது - குஜராத் காங்கிரஸ் தலைவர்