கொவிட் - 19 (கொரோனா) என்ற வைரஸ் தொற்றால், பல்வேறு நாடுகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. சீனாவில் இந்நோய்த்தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மூவாயிரத்தைத் தாண்டியுள்ளது.
இதனிடையே நேற்று டெல்லி, ஹைதராபாத் ஆகி்ய பெருநகரங்களில் கொரோனா பாதிப்பிற்கு ஆளானவர்கள் அடையாளம் காணப்பட்டு, தீவிர மருத்துவக் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டனர். இந்நிலையில் கொரோனாவைத் தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
குறிப்பாக அவர் கொரோனாவைத் தடுக்க மத்திய அமைச்சகங்களும், மாநில அமைச்சகங்களும் விழிப்புடன் செயல்பட்டு வருகின்றதாகவும்; வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்திறங்கும் அனைத்துப் பயணிகளும் தீவிர மருத்துவக் கண்காணிப்பிற்குப் பின்னரே, தங்களது ஊர்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர் என்றும் சுட்டிக்காட்டினார். மேலும் அவர் கொரோனா குறித்து மக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.