குடியுரிமை திருத்தச் சட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து பல்வேறு அமைப்பினரும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். குறிப்பாக, டெல்லியிலுள்ள ஷாகீன் பாக் பகுதியில் நூற்றுக்கணக்கான பெண்கள் தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர்.
இந்நிலையில், தற்போது இந்தியா முழுக்க கோவிட் 19 வைரஸ் பரவிவருவதால், மக்கள் ஒரே இடத்தில் ஒன்று கூட வேண்டாம் என்று சுகாதாரத் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, ஷாகீன் பாக் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கலைந்து செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இது குறித்து போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள பெண் ஒருவர் கூறுகையில்,"நாங்கள் தேவையான சானிடைசர் வைத்திருக்கிறோம். பெண்கள் தங்கள் கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ள டெட்டோல் வழங்குகிறோம். கொரோனா வைரஸ் தொற்றின் அச்சம் காரணமாக நாங்கள் போராட்டத்தைக் கைவிடுவோம் என்று அரசு கருதுகிறது.
அமித் ஷாவும் மோடியும் எங்களைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. எங்களை நாங்களே பார்த்துக்கொள்வோம். இது மட்டுமின்றி கோவிட் 19 வைரஸ் குறித்து விழிப்புணர்வும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்தியில் ஏற்படுத்திவருகிறோம். மேலும், குழந்தைகளைப் போராட்டத்திற்கு அழைத்து வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளோம்" என்றார்.
மேலும், பிப்ரவரி 24ஆம் தேதி வடகிழக்கு டெல்லியில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கவேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கொரோனா அச்சுறுத்தல் - பத்ம விருது விழா ஒத்திவைப்பு