இந்திய கடற்படை முன்னாள் அலுவலர் குல்பூஷன் ஜாதவ்(49), 2016ஆம் ஆண்டு பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் அந்நாட்டு ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். பாகிஸ்தானில் உளவு பார்த்ததாகவும், பயங்கரவாத சதிச் செயலில் ஈடுபட்டதாகவும் அவர் மீது பாகிஸ்தான் அரசு குற்றஞ்சாட்டியது.
அந்நிய நாட்டிற்காக பாகிஸ்தானை உளவு பார்த்ததாகக் கூறி அவருக்கு 2017ஆம் ஆண்டு அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதை எதிர்த்து, நெதர்லாந்து நாட்டின் சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா வழக்கு தொடர்ந்து, வியன்னா ஒப்பந்தப்படி, குல்பூஷன் ஜாதவை இந்திய தூதரகம் அணுக பாகிஸ்தான் அரசு அனுமதிக்க வேண்டும் என்றும், குல்பூஷன் ஜாதவின் மரண தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் தீர்ப்பை பெற்றது.
குல்பூஷன் ஜாதவுக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனைக்கு சர்வதேச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்ததை தொடர்ந்து அவரை பத்திரமாக மீட்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. ஜாதவுக்காக வழக்காட நியமிக்க அனுமதிக்கக்கோரி சர்வதேச அழுத்தங்கள் எழுந்தன.
இதையடுத்து, இந்த வழக்கு தலைமை நீதிபதி அதார் மினல்லா தலைமையிலான அமர்வு முன்னிலையில் ஜூலை 22ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம், குல்பூஷன் ஜாதவ் வழக்கு தொடர்பில் நீதிமன்றத்திற்கு உதவும் ஆலோசகர்களாக மூன்று மூத்த வழக்குரைஞர்களை நியமித்து, இந்திய அரசு சார்பில் வழக்காட பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த வழக்குரைஞர் ஒருவரை நியமிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்குமாறு பாகிஸ்தான் அரசுக்கு உத்தரவிட்டது.
இந்த வழக்கை அதிக எண்ணிக்கையிலான நீதிபதிகளை கொண்ட சிறப்பு அமர்வுக்கு செப்டம்பர் 3ஆம் தேதி மாற்றப்படும் என தெரிவித்தது. பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் ஆயிஷா ஃபாரூகி, ஜாதவுக்கு சட்டப்பூர்வ பிரதிநிதியை நியமிக்க பாகிஸ்தான் அரசு இந்திய அரசிடம் கூறியுள்ளது என தெரிவித்தார்.
இது தொடர்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவாவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த ஸ்ரீவாஸ்தவா, "குல்பூஷன் ஜாதவ் வழக்கு தொடர்பாக பாகிஸ்தான் அரசிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை. சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பை திறம்பட மதிப்பாய்வு செய்தல், நிறைவேற்றுவது, செயல்படுத்துவது தொடர்பான பிரச்னைகளை பாகிஸ்தான் கவனிக்க வேண்டும்" என்றார்.