கேரளாவின் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சட்டப்பேரவை தொகுதிகளில் வட்டியூர்க்காவ் தொகுதியும் ஒன்று. முதலமைச்சர், ஆளுநர், அமைச்சர்கள் ஆகியோரின் அதிகாரப்பூர்வ வீடுகளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளின் அலுவலகமும் இந்த தொகுதியில்தான் உள்ளது.
வரலாற்று ரீதியாகவே வலதுசாரிகளின் கோட்டை என கருதப்பட்டுவந்த இந்த தொகுதியில் நடந்து முடிந்து இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பிரசாந்த் வெற்றிபெற்றார். இந்த வெற்றிக்காக பல்வேறு தரப்பினர் இவரை பாராட்டி பூச்செண்டு அளித்து வருகின்றனர்.
ஆனால், பூச்செண்டை ஏற்க மறுத்த பிரசாந்த், புத்தகங்களை பரிசாக வழங்கும்படி கேட்டுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து, 3300 புத்தகங்களை இவர் பரிசாக பெற்றுள்ளார். மேலும், பரிசாக பெற்ற புத்தகங்களை இவர், அரசு பள்ளிகளில் உள்ள நூலகங்களுக்கு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
வெள்ளத்தால் கேரளா பாதிப்படைந்தபோது, இவரின் துரிதமான செயல்களால் நிவாரண பொருட்கள் மக்களுக்கு சரியான நேரத்தில் சென்றடைந்தது. எனவே, மக்கள் இவரை மேயர் அண்ணா என அன்பாக அழைக்க ஆரம்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அரசியலமைப்பு சட்டம் 70ஆவது ஆண்டை கல்லூரிகளில் கொண்டாட யுஜிசி உத்தரவு!