ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அஞ்சு ராவத். இவர் அப்பகுதியில் உள்ள டாக்டர் பீமாராவ் அம்பேத்கர் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்றுவருகிறார். இந்த மாணவியின் வாழ்வில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட ஒரு துயரச் சம்பவம் அவரது வாழ்க்கையை முற்றிலும் மாற்றிவிட்டது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மாணவி அஞ்சு, ஆடு மேய்த்துக்கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக உயர் அழுத்த மின் வயரில் கைவைத்துள்ளார். இதனால் அவரது இரண்டு கைகளையும் இழக்க நேரிட்டது. எனினும் படிப்பின்மீது மாணவி அஞ்சு அதீத பற்றுக்கொண்டிருந்தார். தொடர்ந்து அவர் தனக்கான தேவைகளை கால்கள் மூலமாகவே பூர்த்தி செய்துகொண்டார்.
படிப்பின் மீதான மாணவியின் ஆர்வத்தைக் கண்ட அப்போதைய மாவட்ட ஆட்சியர் டினா குமார், மாணவியை அம்பேத்கர் பள்ளியில் சேர்த்துள்ளார். ஒன்பதாம் வகுப்பில் அங்கு சேர்க்கப்பட்ட மாணவி அஞ்சுவிற்கு அவரது பெற்றோர், ஆசிரியர், நண்பர்கள் என அனைவரும் தற்போதுவரை உறுதுணையாக இருந்துவருகின்றனர். மேலும் அவர் எழுதுவதற்கு யாருடைய உதவியையும் நாடாமல் தனது கால்களாலேயே வீட்டுப் பாடங்களையும் செய்வதாகக் கூறினார். தேர்வு சமயங்களில் மட்டும் எழுதுவதற்கு வேரு சிலர் உதவுகின்றனர்.
இது குறித்து மாணவி அஞ்சு நமது ஈடிவி பாரத் செய்திகளுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில், தான் பயிலும் பள்ளியில் உள்ள அனைவரும் தனக்கு உதவியாக இருப்பதால் ஒருமுறைக் கூட தனக்கு கைகள் இல்லாதது போல் உணர்ந்தது இல்லை என சிலாகித்துள்ளார். மேலும் வருங்காலத்தில் ஒரு ஆசிரியராக வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பின்னர் பேசிய பள்ளியின் முதல்வர் பாரதி ஜா, மாணவி அஞ்சு கைகளை இழந்தாலும் சிறிதளவும் அவர் தன்னம்பிக்கையை மட்டும் இழக்கவில்லை. அவர் ஒரு சிறந்த மாணவி; நிச்சயமாக தனது குறிக்கோளை அடைவார் என நம்புவதாகக் கூறியுள்ளார்.
தற்போதைய காலகட்டத்தில் பெற்றோர் அனைத்து வசதிகளும் செய்து கொடுத்தாலும் சில மாணவர்கள் தேர்ச்சி பெறுவதற்கே தடுமாறுகின்றனர். ஆனால், மாணவி அஞ்சு இரண்டு கைகள் இல்லாவிட்டாலும் தன்னம்பிக்கையோடு ஆசிரியர் ஆக வேண்டும் என்ற தனது கனவை துரத்திவருவதோடு அனைவருக்கும் சிறந்த எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்துவருகிறார்.