கோவிட்-19 வைரஸ் பரவலை எதிர்கொள்ளும் வகையில் நாட்டில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த சட்டப் பூட்டு வருகிற 14ஆம் திறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ரயில்வே போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படும் என்று செய்திகள் வெளியாகின.
அதில், “நான்கு மணி நேரத்துக்கு முன்னதாக பயணிகள், ரயில் நிலையம் வந்துவிட வேண்டும். பயணிகளுக்கு வெப்ப சோதனை நடத்தப்படும்” என்பன பல்வேறு யூகங்கள் இடம்பெற்றிருந்தது. இதனை ரயில்வே நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இது குறித்து ரயில்வே நிர்வாகம் அளித்துள்ள விளக்கத்தில், “ஏப்ரல் 15ஆம் தேதிக்கு பின்னர் ரயில்களை இயக்குவது தொடர்பாக எந்தவொரு செயல் திட்டமோ, முடிவோ இதுவரை எடுக்கப்படவில்லை.
மக்களின் நலனை கருத்தில் கொண்டு சாத்தியமான முடிவுகளை ரயில்வே நிர்வாகம் எடுக்கும். அதுவரை பயணிகளை யாரும் தவறான மற்றும் வதந்தி செய்திகளால் வழிநடத்தப்பட வேண்டாம். இதுபோன்று வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்துள்ளது.
கோவிட்-19 பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த (மார்ச்) மாதம் 24ஆம் தேதி முதல் வருகிற 14ஆம் தேதி வரை பயணிகள் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. நாடு முழுவதும் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தை உறுதி செய்யும் வண்ணம் சரக்கு ரயில்கள் மட்டும் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.