கோவிட்-19 எச்சரிக்கை என்ற பரப்புரை வடிவ கருப்பொருளில் பெரும் இணைய வழித் தாக்குதலை இந்தியா, சிங்கப்பூர், தென் கொரியா, ஜப்பான், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய ஆறு நாடுகள் காணும் சூழல் நாளை (ஜூன் 21) உருவாகியுள்ளது. இது உலகளவில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த தாக்குதல் வட கொரியாவைச் சேர்ந்த லாசரஸ் ஹேக்கர்ஸ் குழுவினரால் மேற்கொள்ளப்படவுள்ளதென எக்ஸ்.டி நெட் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த இணையத் தாக்குதலில் மட்டும் உள்ள 50 லட்சத்துக்கும் மேற்பட்ட தனிநபர்கள் மற்றும் சிறு, பெரும் நிறுவனங்கள் உள்பட வணிக கணக்குகளின் விவரங்களை களவாடுவதை லாசரஸ் குழுமம் இலக்காகக் கொண்டிருப்பதாக அறிய முடிகிறது.
சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்ட இணைய பாதுகாப்பு நிறுவனமான சைஃபர்மாவின் செயலகம் கூறுகையில், "வட கொரிய ஹேக்கர் குழு இந்த இணையத் தாக்குதலின் மூலமாக நிதி திரட்ட முயல்வதையே இலக்காகக் கொண்டிருக்கிறது. இந்த தாக்குதலில் மின்னஞ்சல்களை களவாடி, மோசடி வலைத்தளங்களைப் பார்வையிட வைத்து அதன் மூலமாக தனிநபர்களின், நிறுவனங்களின் நிதிகளை சுருட்ட உள்ளனர்" என தெரிவித்துள்ளது.
முன்னதாக, லாசரஸின் ஹேக்கர்கள் குழுவினரிடம் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 11 லட்சம் தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரிகள், இந்தியாவைச் சேர்ந்த 20 லட்சம் மின்னஞ்சல் முகவரிகள், இங்கிலாந்து நாட்டின் ஒரு லட்சத்து 80 ஆயிரம் வணிக தொடர்புகள் பற்றிய விவரங்கள், சிங்கப்பூரின் 8,000 நிறுவனங்களின் சிறப்பிக்கப்பட்ட வணிக தொடர்புகள் மின்னஞ்சல் வார்ப்புருவில் உள்ளதாக சிங்கப்பூர் வர்த்தக கூட்டமைப்பின் (எஸ்.பி.எஃப்) அறிக்கை தெரிவிக்கிறது.
சிங்கப்பூரின் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சகத்தால், 2001ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட எஸ்.பி.எஃப் 27,200 நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தி, சிங்கப்பூர் வணிகங்களை ஊக்குவிக்கும் பொறுப்பைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சைஃபர்மாவின் நிறுவனரும், தலைமை நிர்வாக அலுவலருமான குமார் ரித்தேஷ் கூறுகையில், "கடந்த ஆறு மாதங்களில், கோவிட்-19 தொற்றுநோய் பரவலை கருப்பொருளாக வைத்து முன்னெடுக்கப்பட்டு வரும் ஹேக்கர் நடவடிக்கைகளையும் நாங்கள் கண்காணித்து வருகிறோம். இதில் லாசரஸ் ஹேக்கர்ஸ் மிகத்தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
2014ஆம் ஆண்டு சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் மீதான இணையத் தாக்குதல், 2017ஆம் ஆண்டில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் மீதான வன்னா க்ரை ரான்சம்வேர் (WannaCry ransomware) இணையத் தாக்குதல், 2019ஆம் ஆண்டு செப்டம்பரில், இந்திய ஏடிஎம்களில் ஊடுருவி வாடிக்கையாளர்களின் அட்டைத் தரவைத் திருடிய காஸ்பர்ஸ்கி இவற்றை எல்லாம் இந்த வட கொரியா குழுவினரே முன்னெடுத்ததாக பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்" என்கிறார்.
லாசரஸ் ஹேக்கர்ஸ் குழுவானது, வட கொரியாவின் முதன்மை புலனாய்வு பணியகமான மறுமதிப்பீட்டு பொது பணியகத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது என அமெரிக்க இணைய தொழிற்நுட்ப புலனாய்வு முகாமை தெரிவித்திருப்பது கவனிக்கத்தக்கது.