இந்தியாவில் கோவிட்-19 தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதைத் தடுக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. இந்நிலையில், டெல்லி நிஜாமுதீன் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியால் 23 மாநிலங்கள், யுனியன் பிரதேசங்களில் வைரஸ் தொற்று அதிகரித்துள்ளது என்று சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாகத் தமிழ்நாடு (84%), தெலங்கானா (79%), டெல்லி (63%), உத்தரப் பிரதேசம் (59%), ஆந்திரப் பிரதேசம் (61%) ஆகிய மாநிலங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை இணைச் செயலர் லவ் அகர்வால், "இந்தியாவில் இதுவரை கோவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களில் 29 விழுக்காட்டினர் சமய மாநாட்டில் தொடர்புடையவர்கள். மேலும், இம்மாநாட்டில் பங்கேற்றவர்களுடன் தொடர்பிலிருந்த 40 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்" என்றார்.
ஊரடங்கால் வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், "23 மாநிலங்களைச் சேர்ந்த 47 மாவட்டங்களில் கடந்த 28 நாள்களில் யாருக்கும் கோவிட்-19 உறுதிசெய்யப்படவில்லை. அதேபோல 12 மாநிலங்களைச் சேர்ந்த 22 மாவட்டங்களில் கடந்த 14 நாள்களாக யாருக்கும் கோவிட்-19 உறுதிசெய்யப்படவில்லை" எனக் குறிப்பிட்டார்.
கோவிட் தொற்றால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்துப் பேசிய அவர், "நாட்டில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 3.3 விழுக்காட்டினர் உயிரிழக்கின்றனர். இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகளில் 0-45 வயதுடையவர்கள் 14.4 விழுக்காட்டினர், 45-60 வயதுடையவர்கள் 10.4 விழுக்காட்டினர், 60-75 வயதுடையவர்கள் 33.1 விழுக்காட்டினர், 75 மேல் வயதுடையவர்கள் 42.2 விழுக்காட்டினர்" என்று கூறினார்.
மேலும், ரேபிட் சோதனைக் கருவிகள் ஒருவருக்கு வைரஸ் தொற்று உள்ளதா என்பதைக் கண்டறியப் பயன்படாது என்று சொன்ன அவர், வைரஸ் பரவும் வேகத்தையும் எந்த இடங்களில் அதிகமாகப் பாதித்துள்ளது என்பதையும் அறியவே இது பயன்படும் என்பதைச் சுட்டிக்காட்டினார்.
கேரளாவில் வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட தனிநபர் விலகல் விழிப்புணர்வுப் பரப்புரை, ட்ரோன் மூலம் மக்கள் நடமாட்டத்தைக் கண்காணிப்பது உள்ளிட்டவற்றையும் தனது பேச்சில் குறிப்பிட்ட அகர்வால், அச்செயல்பாடுகளை வெகுவாகப் பாராட்டினார்.
அதைத்தொடர்ந்து பேசிய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தைச் சேர்ந்த ரத்தன் கங்ககேத்கர், "ஹைட்ராக்ஸி குளோரோகுயின் இந்த வைரசைக் கட்டுப்படுத்துமா என்பது குறித்துத் தொடர்ந்து கண்காணித்துவருகிறோம்.
சில சுகாதாரப் பணியாளர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹைட்ராக்ஸி குளோரோகுயினை அளித்தோம். இருப்பினும் நாங்கள் எதிர்பார்த்த முடிவு கிடைக்கவில்லை. எனவே தொடர்ந்து அவர்களைக் கண்காணித்துவருகிறோம்" என்றார்.
இதையும் படிங்க: 70 பேர் மட்டுமே பங்கேற்றனர்! சர்ச்சை திருமணம் குறித்து குமாரசாமி