2012ஆம் ஆண்டில் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆறு பேர் கைதுசெய்யப்பட்டனர். அதில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட ராம் சிங் திகார் சிறையில் 2013 மார்ச் 11ஆம் தேதி சிறையிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இன்னொரு குற்றவாளி சிறுவர் என்பதால் மூன்றாண்டு சிறார் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டு, பின் விடுவிக்கப்பட்டார்.
நிர்பயா வன்படுகொலையில் தொடர்புடைய முகேஷ், வினய், அக்ஷய், பவன் ஆகிய நான்கு பேருக்கும் தூக்குத் தண்டனை விதித்து டெல்லி விரைவு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. கடந்த எட்டு ஆண்டுகளாக நடைபெற்றுவந்த இந்த வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நால்வரையும் வரும் மார்ச் 20ஆம் தேதியன்று அதிகாலையில் தூக்கில்போட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, 2012 டிசம்பர் 16ஆம் தேதியன்று குற்றம் நடந்தபோது தான் டெல்லியிலேயே இல்லை. தனக்கும் இந்தக் குற்றத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எனவே தனக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை ரத்துசெய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து குற்றவாளிகளுள் ஒருவரான முகேஷ் சிங் மறுசீராய்வு மனு ஒன்றை தாக்கல்செய்திருந்தார்.
இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி பிரிஜேஷ் சேத்தி, “முன்னதாக, நீதிமன்றத்தில் நடைபெற்ற விரிவான விசாரணையின் முடிவில் வழங்கப்பட்ட நியாயமான உத்தரவில் தலையிட எந்த முகாந்திரமும் இல்லை. வழக்கின் விசாரணையின்போது வன்படுகொலை தொடர்பிலான எந்தவொரு ஆதாரங்களையும் புறக்கணிக்காமல், அனைத்தையும் கருத்தில்கொண்டே இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது.
எனவே, இந்த மனுவில் கூறப்பட்டதைப் போல பரிந்துரைக்க நீதிமன்றத்தில் எதுவும் இல்லை. நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் எந்தக் குறைபாடும், சட்டவிரோதமும், முறைகேடும் இல்லை” என்று கூறி முகேஷின் மனுவை தள்ளுபடி செய்தார்.
இதையும் படிங்க : ''காலமெல்லாம் கைம்பெண்ணாக வாழமுடியாது'' - விவாகரத்து கேட்ட நிர்பயா குற்றவாளியின் மனைவி!