டெல்லியில் ஓடும் பேருந்தில் நிர்பயா என்ற மாணவி, ஆறு பேரால் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு தூக்கி வீசப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அவர், மருத்துவச் சிகிச்சை பலனளிக்காமல் சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இந்த வழக்கை விசாரித்த டெல்லி விசாரணை நீதிமன்றம், குற்றத்தில் ஈடுபட்ட ஆறு பேரில் ஐவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. ஒருவர் இளஞ்சிறார் என்பதால், அரசு கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பப்பட்டு பின்னர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில், நீதிமன்றத்தால் உச்சபட்ச தண்டனை விதிக்கப்பட்ட ஐவரில் ஒருவர் திகார் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மீதமுள்ள நால்வரையும், கடந்த மாதம் 22ஆம் தேதி ஒரே நேரத்தில் தூக்கிலிட வேண்டும் என டெல்லி நீதிமன்றம் 17ஆம் தேதி உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.
இதையடுத்து குற்றவாளிகள் நால்வரும் ஒருவர் பின் ஒருவராக நீதிமன்றத்தில் கடைசி நிவாரண மனுக்கள், இளஞ்சிறார் மனு, மறு ஆய்வு மனு என தாக்கல் செய்தனர். குடியரசுத் தலைவருக்கும் கருணை மனுக்களை அனுப்பினர்.
இது குற்றவாளிகள் தண்டனையை தாமதப்படுத்த மேற்கொள்ளும் தந்திரங்கள் என நிர்பயாவின் தாயார் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் குற்றஞ்சாட்டினார். இதற்கிடையில் குற்றவாளிகளின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. குடியரசுத் தலைவரும் கருணை மனுக்களை நிராகரித்தார்.
இந்நிலையில் குற்றவாளிகள் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், “நாட்டில் எத்தனையோ கொடுஞ்செயல்கள் புரிந்தோரின் வழக்குகள் நிலுவையிலுள்ள போது, இந்த வழக்கில் மட்டும் ஏன் இத்தனை அவசரம்” என வினாயெழுப்பினார்.
இதையடுத்து தனது மகளின் இறப்பு அரசியலாக்கப்படுகிறது எனக் கூறிய நிர்பயாவின் தாயார், இது பற்றி உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார். அந்த முறையீட்டு மனுவில், “பாலியல் படுகொலை குற்றவாளிகளை தூக்கிலிட புதிய தேதி அறிவிக்க வேண்டும்” என்று கேட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், “பாலியல் குற்றவாளிகளின் தண்டனை நிறைவேற்றம் குறித்து விசாரணை நீதிமன்றம் முடிவெடுக்கலாம் என உத்தரவிட்டது. முன்னதாக இந்த வழக்கில், “மறு உத்தரவு வரும் வரை எவ்வித முடிவும் எடுக்கவேண்டாம்” என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை ஏற்று தற்போது விசாரணை நீதிமன்றம் நால்வருக்கும் தண்டனை நிறைவேற்ற புதிய தேதி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, நால்வரும் வரும் 20ஆம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு தூக்கிலிடப்பட உள்ளனர்.
இதற்கான அறிவிப்பை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் அறிவித்துள்ளது. நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி இன்று காலை ஆங்கில செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “நிர்பயா பாலியல் தூக்கு தண்டனை கைதிகளின் அனைத்து சட்ட தீர்வுகளும் முடிவுக்கு வந்துள்ளன. ஆகவே அவர்களை தூக்கிலிட புதிய தேதி இன்று அறிவிக்கப்படும் என நினைக்கிறேன்” என்று கூறியிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
இதையும் படிங்க: பவன் குப்தா கருணை மனு நிராகரிப்பு