தலைநகர் டெல்லியில் 2012ஆம் ஆண்டு மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்படுக் கொல்லப்பட்டார். நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கில், குற்றவாளிகள் நான்கு பேருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இந்த மரண தண்டனையை எதிர்த்து குற்றவாளிகள் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து குற்றவாளிகள் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அளித்தனர்.
அந்த மனுக்களை குடியரசுத் தலைவர் அண்மையில் தள்ளுபடி செய்தார். இதையடுத்து குற்றவாளிகள் நான்கு பேரையும் தூக்கில் போடும் பணிகள் விரைவாக நடைபெற்று வந்தன. அதன்படி குற்றவாளிகள் நான்கு பேரும் ஜனவரி 22ஆம் தேதி திகார் சிறையில் தூக்கிலிடப்பட உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை சிறைத் துறை நிர்வாகம் செய்துவருகிறது.
இந்நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான வினய்குமார் சர்மா, தூக்கு தண்டனையை நிறுத்திவைக்க உச்ச நீதிமன்றத்தில் கடைசி நிவாரண மனுவை (க்யூரேட்டிவ்) இன்று தாக்கல் செய்துள்ளார். கடைசி நிவாரண மனு, மரண தண்டனை குற்றவாளிகளின் இறுதி ஆயுதமாகும். எனினும் இதில் அவருக்கு நிவாரணம் கிடைக்குமா? என்பது சந்தேகமே.
இதையும் படிங்க: நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுகிறார் பவன் ஜலாட்!