ஓடும் பேருந்தில் நிர்பயா என்ற மருத்துவக் கல்லூரி மாணவி கொடூரமாகக் கூட்டு வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டார். சிங்கப்பூரில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த வழக்கில் முகேஷ் குமார் சிங், பவன் குப்தா, வினய் குமார் சர்மா, அக்சய் ஆகிய நால்வரையும் குற்றவாளிகளாக அறிவித்த டெல்லி நீதிமன்றம், அவர்களுக்கு தூக்குத் தண்டனை விதித்தது.
தண்டனையைத் தள்ளிப்போடும் நோக்கில், ஒருவர் பின் ஒருவராக மறுசீராய்வு மனுக்களையும், கருணை மனுக்களையும் தாக்கல் செய்து வருகின்றனர். இதன் காரணமாக, பிப்ரவரி 1ஆம் தேதி நிறைவேற்றபட வேண்டிய தூக்கு தண்டனை மார்ச் 3ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளுள் ஒருவரான பவன் குப்தா உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவின் விசாரணை இன்னும் நிலுவையில் இருப்பதால், மார்ச் 3ஆம் தேதி நிறைவேற்றப்படவுள்ள தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்குமாறு, டெல்லி உயர் நீதிமன்றத்தில் பவன் குப்தா மற்றொரு மனுவையும் தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறவுள்ள நிலையில், விசாரணைக்கு ஆஜராகுமாறு திஹார் சிறை அலுவலர்களுக்கு டெல்லி நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதையும் படிங்க : அமெரிக்க - தாலிபான்களிடையே கையெழுத்தானது ஒப்பந்தம்